அம்பாறை மாவட்டத்தில் உள்ள 3 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள கிராமங்களின் பெரும்பாலான உள் வீதிகள் அனைத்தும் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் வயல்கள் நீரில் முழ்கியுள்ளதுடன் இவ்வீதிகளில் மக்கள் போக்குவரத்து செய்வதில் மிகுந்த சிரமங்களையும் எதிர் கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக நாவிதன்வெளி, கல்முனை முஸ்லீம் பிரிவு, தமிழ் உப பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பிரதான போக்குவரத்துபாதைகள் சில வெள்ளக்காடாக காட்சி தருவதனால் தூர இடங்களுக்கு செல்லும் அனைத்து போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளதோடு உள்ளூர் வீதிகள் அனைத்திலும் நீர் நிரம்பி வழிகின்றது.
நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சவளைக்கடை பிரதேசத்தில் உள்ள பல கிராமங்களிலும் கல்முனை பிரதேசத்தில் நற்பிட்டிமுனை மணல்சேனை போன்ற கிராமங்களும் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.மேலும் துறைவந்தியமேடு, கல்முனை கல்முனைக்குடி, சாய்ந்தமருது, மருதமுனை, சம்மாந்துறை, பாண்டிருப்பு மற்றும் மட்டக்களப்பு, திருகோணாமலை, மாவட்டங்களில் தற்போது பெய்துவரும் கடும் மழையால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள அபாய நிலை தோன்றியுள்ளது.
தொடர்ந்து மூன்று தினங்களுக்கும் மேலாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் கடும் மழை பெய்துவருவதுடன் பல பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டு மக்கள் தங்களது இருப்பிடங்களில் தங்கி வாழமுடியாமல் இடம்பெயர தயாராகி வருகின்றனர்.அத்துடன் கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டு வருகிறது.
பருவமழை தொடர்ச்சியாக பெய்ந்துவருகின்றது இதன் காரணமாக உள்ளுர் குளங்களின் வான் கதவுகள் சில திறந்து விடப்பட்டுள்ளது. சில இடங்களில் மரங்களும் முறிந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.