பகல்-இரவு போட்டியில் பயன்படுத்தப்படும் பிங்க் நிற பந்து, சிவப்பு பந்தை விட அதிக அளவில் ஸ்விங் ஆகும் என இளம்வீரர் உனத்கட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான இந்தப்போட்டி கொல்கத்தாவில் நடக்கிறது.
பொதுவாக பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படும். ஆனால், தற்போதைய இந்திய அணியில் முகமது ஷமி, சஹா ஆகியோரும், உள்ளூர் தொடரான துலீப் டிராபியில் வேகப்பந்து வீச்சாளரான ஜெய்தேவ் உனத்கட்டும் தான் பிங்க் நிற பந்தில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள்.
விராட் கோஹ்லி உட்பட மற்ற வீரர்களுக்கு இதில் அனுபவம் இல்லை. இந்நிலையில், பிங்க் பந்தில் விளையாடிய அனுபவத்தை வைத்து, இந்திய அணி வீரர்களுக்கு உனத்கட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘டெஸ்டில் பயன்படுத்தப்படும் சிவப்பு பந்தில் இருந்து முற்றிலுமாக மாறி பிங்க் பந்தை பயன்படுத்துவதால், அது எல்லோருக்கும் சவாலானதாக இருக்கும்.
எஸ்.ஜி. சிவப்பு பந்தை போன்று பிங்க் பந்து முன்னதாகவே ரிவர்ஸ் ஸ்விங் ஆகாது. ஆனால், டெஸ்ட் போட்டிக்கு முன் பந்தை தரத்தை அவர்கள் நன்கு அறிவார்கள். உள்ளூர் போட்டிகளுக்கு தயார் செய்யப்படும் ஆடுகளத்தை விட தரமான ஆடுகளத்தை தயார் செய்வார்கள்.
பிங்க் பந்து போட்டி சிறந்த ஆட்டமாக இருக்கும். புதிய பிங்க் பந்து முன்னதாகவே சிவப்பு பந்தை காட்டிலும் அதிக அளவில் ஸ்விங் ஆகும். இதனால் புதுப்பந்தை எதிர்கொள்வது துடுப்பாட்ட வீரர்களுக்கு சவாலாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.