உலக உயர் இரத்த அழுத்த லீக் மற்றும் இதர சுகாதார அமைப்புகள் இணைந்து சூப்பர் மார்க்கெட் மற்றும் ரெஸ்டாரண்டுகளுக்கு உப்பு குறித்த ஆபத்து எச்சரிக்கை விழிப்புணர்வை அளித்து வருகிறது.
அதில் சூப்பர் மார்க்கெட்டுகளில் சிகரெட்டிற்கு தரும் அதே விழிப்புணர்வு செய்தியை உப்பு பாக்கெட்டுகளிலும் தர சொல்லி அறிவுறுத்துகிறது. ரெஸ்டாரண்டுகளிலும் உப்பு கொட்டும் டப்பாக்களில் எச்சரிக்கை வாசகங்களை ஒட்ட அறிவுறுத்தியுள்ளது.
ஏனெனில் 2017 ஆண்டில் மட்டும் உப்பினால் உலகம் முழுவதிலும் மூன்று மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். இதற்குக் காரணம் உப்பை சாப்பிட்டதற்காக அல்ல. அதிக அளவில் எடுத்துக்கொண்டதே காரணம் என்கிறார் நார்ம் கேம்பெல். இவர் முன்னாள் உலக உயர் ரத்த அழுத்த லீக்கின் தலைவராக இருந்தவர்.
இதோடு உலக சுகாதார அமைச்சகம் உப்பை அதிகமாக உட்கொள்ளும் நாடுகளைப் பட்டியலிட்டு அந்த நாடுகளில் 2025க்குள் 30 சதவீதமாகக் குறைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக அந்த நாடுகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.
அப்படி என்ன நோயை உப்பு உண்டாக்கிறது என்கிறீர்களா..?
உயர் இரத்த அழுத்தம் என்னும் தீராத வியாதியை கொடுக்கிறது இந்த உப்பு. அதனாலேயே இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது.
சூப்பர் மார்க்கெட், ரெஸ்டாரண்டுகள் மட்டுமன்று அரசாங்கத்திற்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பை குறைந்த அளவில் பயன்படுத்த எச்சரிக்கிறது. இதை ஆமை வேகத்தில் செய்யாமல் தீவிரமாக உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளது. உப்பு தேவையைக் குறைப்பதில் அவசரம் அவசியம் என்கிறது. இதனால் பல உயிர்களை நோயிலிருந்து காக்கலாம்.
இதற்காக பல நாடுகளும் மக்களின் உப்பு அளவை குறைக்க வலியுறுத்தி வருகின்றன. இளமையில் இறப்பிற்கு இரத்த அழுத்தமும் முக்கியக் காரணம். இரத்த அழுத்தத்திற்கு மிக முக்கியக் காரணம் உப்பு என உலக சுகாதார அமைச்சகம் தெரிவிக்கிறது.
மேலும் அந்த ஆய்வில் பலருக்கும் உப்பின் சரியான அளவு தெரிவதில்லை. எவ்வளவு அதிகரித்தால் ரத்த அழுத்தம் உண்டாகும் என்பதும் தெரிவதில்லை. எனவே உப்பு பாக்கெட்டுகளில் குறிப்பிட்ட உணவு வகைகளை பட்டியலிட்டு எவ்வளவு உப்பு அளவை சேர்க்க வேண்டும் என்பதையும் குறிப்பிட முடிவு செய்துள்ளது. அதற்கான வேலைகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளது.
இறுதியாக அந்த ஆய்வில் “ அதிக அளவிலாக சோடியம் (உப்பு) உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்தை உண்டாக்கும். அதனால் வயிற்று புற்றுநோய் உண்டாகும் எனவே உப்பை குறைவாகப் பயன்படுத்துங்கள்” என்று அறிவுறுத்துகிறது.