இந்தியாவில் நள்ளிரவில் பயத்தில் ஒதுங்கி நின்ற பெண்ணுக்கு நடத்துனர், ஓட்டுனர் செய்த உதவி சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
கேரளாவின் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் எல்சினா. இளம் பெண்ணான இவர் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் எம்.பில் படித்து வருகிறார்.
இதனால் தனது படிப்புக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து கல்லூரியிலிருந்து தனது மாநிலத்துக்கு வந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவந்தார்.
இந்நிலையில், கோட்டயம் அருகே தனது உறவினரின் ஊரான பொடிமட்டம் என்கிற பகுதிக்குச் செல்ல நினைத்து அதற்காக எர்ணாகுளத்திலிருந்து மதுரைக்குச் செல்லும் பேருந்தில் செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார்.
எல்சினா இறங்க வேண்டிய காஞ்சிரப்பள்ளி அருகே உள்ள கல்லூரி நிறுத்தத்துக்கு பேருந்து வரும்போது இரவு 11.30 மணி, அன்று ஸ்டிரைக் நடந்ததால் கடைகள் அனைத்தும் வெகு சீக்கிரமாக அடைக்கப்பட்டுள்ளது,
அதுமட்டுமின்றி அன்றைய தினம் நல்ல மழை பெய்ததால், மின்சாரம் எதுவும் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் பேருந்தை விட்டு இறங்கிய எல்சினா, தனது உறவினருக்கு போன் செய்து பேசிய போது, அங்கு அவரால்
கனமழை காரணமாக வீட்டில் இருந்து நகர முடியவில்லை எனவும், கொஞ்சம் நேரமாகும் என்று கூறியுள்ளார்.
இதனால் பதறிய படி பயத்தில் நின்று கொண்டிருந்த எல்சினாவை அங்கிருந்த பேருந்தின் நடத்துநரும் ஓட்டுநரும் அவரிடம் நடந்த விவரத்தைக் கேட்டுள்ளனர்.
அதன் பின் நிலைமையை உணர்ந்த நடத்துநரும் ஓட்டுநரும் எல்சினாவை தனியாக விட்டுச் செல்லக் கூடாது என்பதற்காக, பேருந்தில் இருந்த பயணிகளிடம் எல்சினாவின் நிலையை எடுத்து கூறி, கொஞ்ச நேரம் பேருந்தில் காத்திருந்த அந்த பெண்ணின் உறவினர் வந்த பின்பு, அவரை அனுப்பி வைத்து விட்டு பேருந்தை எடுத்து செல்லலாம் என்று கூறியுள்ளனர்.
பயணிகளும் ஒத்துக் கொள்ள, அரைமணி நேரம் கழித்து உறவினர் வர அவரிடம் எல்சினாவை பத்திரமாக அனுப்பிவைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவத்தை அங்கிருந்த பயணி மூலம் அந்தப் பகுதி எம்.எல்.ஏ-வுக்கு தெரியவர அவர் இது குறித்து பேஸ்புக்கில் பதிவிட, குறித்த டிரைவர் மற்றும் ஓட்டுனருக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.