வீட்டு கழிவறை அருகே சவக்குழி… புதைக்கப்பட்ட கணவன்! விசாரணையில் வெளிவந்த உண்மை

தமிழகத்தில் மாயமானதாக தேடப்பட்ட கணவனை, மனைவியே தனது மகன் மற்றும் மகளுடன் சேர்ந்து கொலை செய்திருக்கும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஸ்ரீரங்காபுரத்தை சேர்ந்தவர் சுப்புராஜ்(55). இவருக்கு பிச்சையம்மாள் என்ற மனைவியும், சுரேஷ் என்ற மகனும் மற்றும் பிரியா என்ற மகளும் உள்ளனர். இதில் பிரியாவுக்கு திருமணம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சுப்புராஜ் திடீரென்று மாயமானார். இதனால் சுப்புராஜின் சகோதரர்கள் அவரை பல இடங்களில் தேடினர்.

அதன் பின் மனைவி பிச்சையம்மாளிடம் கேட்ட போது, அவர் கேரளாவிற்கு வேலை தேடி சென்றுவிட்டதாக கூறியுள்ளார். இதனால் தீபாவளிக்கு அவர் வந்துவிடுவார் என்று சகோதரர்கள் அவரை தேடாமல் இருந்துள்ளனர்.

ஆனால் தீபாவளிக்கும் சுப்புராஜ் ஊர் திரும்பாததால் சகோதரர் கணேசனுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி சுப்புராஜின் வீட்டின் முன்பு குழி தோண்டி அது மூடப்பட்டது போன்று இருந்ததால், உடனடியாக அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரில் சுப்புராஜ் குறித்து அண்ணியிடம் பல முறை கேட்டும் சரியாக பதில் அளிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டின் கழிவறை அருகே சந்தேகப்படும் படி இருந்த இடத்தை தோண்ட முடிவு செய்தனர்.

அதன் படி, காவல்துறையினரின் முன்னிலையில் சுப்புராஜின் சகோதரர் கணேசன் அந்த இடத்தைத் தோண்டினார். அப்போது சுமார் 3 அடி ஆழம தோண்டிய பின்னர் பாதிர் எரிந்த நிலையில் எலும்புகள் தென் பட்டதால், உடனடியாக பொலிசார் தோண்டுவதை நிறுத்திவிட்டு, உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து குறித்த இடத்திற்கு அதிகாரிகள் வந்த பின்பு, அவர்கள், முன்னிலையில் தோண்டப்பட்டது. சுப்புராஜின் மனைவி பிச்சையம்மாள் மற்றும் அவரது பிள்ளைகளிடம் பொலிசார் கிடுக்கு பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில், சம்பவ தினத்தன்று பிரியா தன்னுடைய மாமியார் வீட்டிலிருந்து தாய் பிச்சையம்மாள் வீட்டிற்கு வந்துள்ளார்.

இரவில் பிச்சையம்மாள் தனது மகன், மகளுடன் வீட்டில் இருந்துள்ளார். நள்ளிரவில் சுப்புராஜ் குடித்துவிட்டு வீட்டில் ரகளையில் ஈடுபட, கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதில், சுப்புராஜை தள்ளிவிட்ட போது, அவர் தலையில் அடிபட்டு மயக்கமடைந்துள்ளார். அவர் இறந்து போனதாக கருதி மனைவி மற்றும் பிள்ளைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின் அவசர,அவசரமாக வீட்டின் கழிவறை அருகே குழிதோண்டி சுப்புராஜின் உடலை புதைத்துள்ளனர். இதை மூன்று பேரும் ஒத்துக் கொண்டதால், மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மயக்க மடைந்தவரை உயிரிழந்ததாக கருதி புதைத்திருக்கலாம் என்றும், உயிரிழந்ததை உறுதிப்படுத்திக் கொள்ளாமல் தப்பிக்க வேண்டும் என்ற வேகத்தில் வீட்டுக்குள் சவக்குழி தோண்டி புதைத்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.