வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான அடிதளத்தை இடவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கண்டி திகன நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சஜித் பிரேமதாச, “ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் தனித்தனியான தொழில் பேட்டைகளை உருவாக்க எதிர்பார்கின்றேன்.
இந்தியா, பங்களாதேஷ், வியட்நாம், நேபாளம், கம்போடியா ஆகிய நாடுகளுக்கு கிடைக்கும் வெளிநாட்டு முதலீடுகளை இலங்கைக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அவ்வாறான முதலீடுகளைக் கொண்டு வந்து எனது தந்தை போன்று ஒவ்வொரு பகுதியிலும் தொழில் பேட்டைகள் உருவாக்கப்படும். அதனூடாக இளைஞர், யுவதிகளுக்கு மில்லியன் கணக்கான வேலை வாய்ப்புகளை வழங்கத் தீர்மானித்துள்ளேன்.
அனைத்து பிரிவினரும் நம்மை அடையக்கூடிய வகையிலான கொள்கைப் பிரகடனம் ஒன்றை தயாரித்து முன்வைத்துள்ளேன். அதற்கமைய என்னால் முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரகடனத்தை நன்றாக வாசியுங்கள். அதில் சொல்லப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் எந்த குறையும் இல்லாமல் நிறைவேற்றப்படும்.
கடந்த காலங்களில் திகன பகுதியில் இடம்பெற்ற சில சம்பவங்களால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சகோதரர்களைக் காண என்னால் வரமுடியாமல் போனது. அந்த வேளையில் நான் கடுமையாக சுகவீனம் அடைந்திருந்தேன்.
எனினும் அந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவரதும் எதிர்காலத்தையும் நான் பொறுப்பேற்கின்றேன்” என்று தெரிவித்தார்.