மஞ்சள் இலை மற்றும் குப்பைமேனி இலை இரண்டையும் அரைத்து குளித்த பிறகு உடலில் பூசி குளித்தால் உடலில் உள்ள சிறு சிறு முடிகள் நீங்கும்.
பால் பொருட்களில் ஒன்றான மோருடன் மஞ்சள் தூளை சேர்த்து, சென்சிட்டிவ் பகுதிகளில் தேய்த்தால், சுருக்கங்கள் வராமல் இருக்கும்.
மஞ்சள் பொடியை, நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு, காய்ச்சி, வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அடிபட்ட புண்களில் இந்த எண்ணெயைத் தடவிவர, சிறந்த கிருமி நாசினியாகச் செயல்பட்டு, ஆறாத காயங்கள், பித்தவெடிப்பு, சொறி, சிரங்கைக் குணம் ஆக்கும். வலி நிவாரணியாகவும் செயல்படும்.
கழுத்து, கணுக்கால்களில் கருமையைப் போக்க மஞ்சள் தூளை தயிரில் கலந்து தடவி வரவும்.
தோலில் வெப்பத்தை உண்டாக்கி, கிருமிகளை அகற்றும் என்பதால், தோல் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு மஞ்சள் சிறந்த நிவாரணி. மஞ்சளை தினமும் குளிக்கும்போது பூசி வந்தால் தேமல், சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள், வியர்வை நாற்றம், தேவையற்ற முடிகள் போன்றவை நீங்கும்.
மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.
பாதங்களில் இருக்கும் வெடிப்புக்களை போக்குவதற்கு, தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து, வெடிப்புள்ள பகுதியில் தடவி வந்தால், விரைவில் வெடிப்புக்கள் நீங்கி, பாதங்கள் மென்மையாக இருக்கும்.
சருமத்தில் உள்ள காயங்களை போக்கி, அழகான சருமத்தை பெறுவதற்கு, மஞ்சள் தூளுடன் தேன் சேர்த்து கலந்து, தடவி ஊற வைத்து கழுவினால் சருமத்தில் உள்ள காயங்கள் மறைந்து அழகான சருமத்தை பெறலாம்.
பாலில் சிறிது மஞ்சள் தூளை கலந்து, அதனைக் கொண்டு முகத்தை தேய்த்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும்.
உடலில் வளரும் தேவையில்லாத முடியை எளிதில் நீக்குவதற்கும், வளராமல் தடுப்பதற்கும், ஆலிவ் ஆயிலில் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து உடலில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
தினமும் கடலை மாவுடன் மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு கலந்து, உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் மென்மையாகவும், அழகாகவும் மாறும்.
தயிருடன் மஞ்சள் தூளை சேர்த்து, முகத்திற்கு தடவி மசாஜ் செய்து வந்தால், சருமம் குளிர்ச்சியுடன் இருப்பதோடு, பொலிவோடும் இருக்கும்.
வெளியே வெயிலில் சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்ததும், பொலிவிழந்து இருக்கும் முகத்தை பொலிவாக்குவதற்கு, வெள்ளரிக்காய் சாற்றில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, தடவி மசாஜ் செய்து நீரில் கழுவ வேண்டும்.
எலுமிச்சை சாற்றில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி வந்தால், வெயிலால் மாறியிருந்த சருமத்தின் நிறம், மீண்டும் பழைய நிறத்திற்கு திரும்புவதோடு, சருமமும் பொலிவோடு மென்மையாக இருக்கும்.