லண்டன் விமானத்தில் ஒளிந்திருந்து பயணம் செய்தவராக சந்தேகப்படும் ஒருவரின் சடலம் கிளஃபாம் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அவர் யார் என்பது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
தெற்கு லண்டனில் கிளஃபாம் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பின் தோட்டத்தில் குறித்த நபர் சடலமாக விழுந்துள்ளார்
குடியிருப்பின் தோட்டத்தில் ஒருவர் ஐஸ் கட்டை போன்று சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர், பொலிசாருக்கு தகவல் அளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்த பொலிசார், விமானத்தின் தரையிறங்கும் கியர் பெட்டியில் ஒரு பை, தண்ணீர் மற்றும் உணவைக் கண்டுபிடித்ததாக தெரிவித்திருந்தனர்.
அந்த நபர் அங்கேயே ஒளிந்துகொண்டு நடுவானில் விமானத்திலிருந்து விழுந்திருக்கலாம் என்று அப்போது கூறப்பட்டது.
இந்த நிலையில் நைரோபியிலிருந்து வந்த கென்ய பயணிகள் விமானத்தில் இருந்து விழுந்தவர் தொடர்பில் தற்போது முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த நபரின் சடலமானது கடந்த ஜூன் 30 ஆம் திகதி பிரித்தானிய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.40 மணிக்கு கண்டெடுக்கப்பட்டது.
இவர் கென்யா விமான நிலையத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்தவர் எனவும் வயது 29 எனவும் அவரது பெயர் Paul Manyasi எனவும் தற்போது தெரியவந்துள்ளது.
இவரது காதலியுடன் இணைந்து புதிய வாழ்க்கை தொடங்க முடிவெடுத்திருந்த நிலையில், அவர் உயிருக்கு ஆபத்தான இந்த திட்டத்தை முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.