தமிழகத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சக நண்பனை சாதுர்யமாக செயல்பட்டு காப்பாற்றிய பள்ளி மாணவனுக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரையூரில் இருக்கும் உடையார்கூட்டம் கிராமத்தை சேர்ந்தவர் வழிவிடுமுருகன் (48). இவருக்கு வடிவேலன்(13) என்ற மகன் உள்ளார்.
அவர் அங்கிருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்நிலையில் கடந்த திங்கட் கிழமை மாலை பள்ளி முடிந்தப்பின் வடிவேலன் சக நண்பர்களுடன் அங்கிருக்கும் புளிய மரத்தின் அருகே விளையாடியுள்ளார்.
அப்போது அங்கு மரத்தில் அமர்ந்திருந்த வடிவேலனின் வகுப்புத் தோழரான மாணவர் ஒருவர் தனது தந்தை மறைந்த சோகத்தில் இருந்ததால், திடீரென தற்கொலை செய்ய முடிவு செய்து, உடனடியாக மரத்தில் துண்டை கட்டி தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதைக் கண்ட அங்கிருந்த மாணவர்கள் பயத்தில் அலறி அடித்து ஓட, வடிவேலன் மட்டும் துணிச்சலாக சக நண்பனை காப்பாற்றும் எண்ணத்தில் சமயோசிதமாக ஓடிச்சென்று மாணவன் கழுத்தில் துண்டு இறுகாவண்ணம் தூக்கி பிடித்துக்கொண்டார்.
மாணவனை தூக்கிப்பிடித்துக்கொண்டே, ஓடும் சக மாணவர்களை பார்த்து யாரையாவது அழைத்துவாருங்கள் அதுவரை நான் தாங்கிப்பிடித்துக் கொள்கிறேன் என கூறியதால், அவர்கள் அக்கம் பக்கத்தினரை அழைத்து வந்து தூக்கில் தொங்கிய மாணவனை மீட்டனர்.
அதன் பின் மாணவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவன் தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தூக்கிட்ட சக நண்பனை துணிச்சலுடன், சமயோசிதமாக சிந்தித்து காப்பாற்றிய மாணவர் வடிவேலன் குறித்து கேள்விப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், மாணவரையும், அவரது பெற்றோரையும் தனது அலுவலகத்துக்கு அழைத்தார். பெற்றோருடன் வந்த மாணவர் வடிவேலனை பாராட்டி, புத்தகம் ஒன்றை பரிசாக அளித்தார்.
அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக மாணவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேலும் வடிவேலன் பெயரை அரசு விருது பட்டியலுக்கு பரிந்துரைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.