மாணவி வழக்கில் திடீர் திருப்பம்.!

சென்னை ஐஐடியில் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி, முதலமாண்டு முதுகலை பட்ட படிப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த வாரம் சனிக்கிழமை இரவு விடுதியில் உள்ள தனது அறையில் பாத்திமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து, மாணவியின் உடலை உடற்கூறு ஆய்வு செய்து முடிந்து அவரது பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மாணவியின் உடைமைகளும் ஒப்படைக்கப்பட்டன. தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதே மாணவியின் தற்கொலைக்கு காரணம் என ஐஐடி நிர்வாகம் சார்பில் பாத்திமா லத்தீப்பின் பெற்றோர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

பாத்திமா லத்தீப்பின் இறுதிச் சடங்குகள் முடிந்த பின், அவரது செல்போனை பெற்றோர்கள் ஆராய்ந்த போது அதில், தன் தற்கொலைக்கு உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் என்பவர் தான் காரணம் என மாணவி செல்போனில் ஆங்கிலத்தில் பதிந்து வைத்திருந்தது தெரியவந்தது .

மேலும், அந்த செல்போனில்மேலும் இரு பேராசிரியர்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்த மாணவி, பேராசிரியர்கள் தன்னை துன்புறுத்தியதாகவும் அதில் பதிவிட்டிருந்தார். செல்போனில் இருந்த பதிவுகள் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு முந்தைய நாளான நவம்பர் 8 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில், இந்த  தற்கொலை தொடர்பாக ஐஐடி வளாகத்தில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று நேரில் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர்  ஏ.கே.விஸ்வநாதன் கூறியதாவது, மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக  இதுவரை 4 பேராசிரியர்கள் உட்பட 22 பேரிடம் விசாரணை நடைபெற்றிருப்பதாக தெரிவித்தார்.

மேலும், மாணவி பாத்திமா லத்தீப் வழக்கை தமிழக காவல்துறை விசாரணையில் இருந்து மத்திய குற்ற பிரிவுக்கு மாற்றுகிறோம். இந்த வழக்கை விசாரிக்க அடிஷனல் கமிஷனர் ஆப் சென்ட்ரல் க்ரைம் பிரான்ச் தலைமையில் ஒரு சிறப்பு குழு உருவாக்கப்படவுள்ளது. புலன் விசாரணை அதிகாரியாக மெஹலினா தொடர்வார்கள். விரைவில் புலன் விசாரணையை முடித்து உண்மையை வெளிக்கொண்டுவர முயற்சி எடுக்கப்படும் என்றார்.