கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆசிய நாடுகளில் பன்றி காய்ச்சல் மிக வேகமாக பரவியது. இந்த ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் விலங்குகளிடம் வேகமாக பரவக்கூடிய, குணப்படுத்த முடியாத நோயாகும். இந்த நோய் தாக்கிய பன்றிகளில் ஒன்று கூட உயிர் தப்பியது இல்லை. ஆனால், இந்த நோயால் மனிதர்களுக்கு எந்த வித ஆபத்தும் இல்லை.
இந்த நிலையில்,தென்கொரியாவில் வேகமாக பரவி வந்த ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலை தடுக்கும் முயற்சியாக சுமார் 47 ஆயிரம் பன்றிகளை அந்த நாட்டு அதிகாரிகள் கொன்று குவித்தனர். அப்படி கொல்லப்பட்ட பன்றிகள் உடல்கள் அனைத்தையும் வடகொரியாவில் எல்லையையொட்டி ஓடும் இம்ஜின் ஆற்றுக்கு அருகில் புதைத்தனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இம்ஜின் ஆற்றங்கரையோர பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக பன்றிகளின் உடல்கள் புதைக்கப்பட்ட பகுதிகளில் மழை நீரில் மணல் கரைந்து, பன்றிகளின் ரத்தம் வழிந்தோடி இம்ஜின் ஆற்றில் கலந்தது. இதனால் ஆறு முழுவதும் சிவப்பாக மாறியுள்ளது.
இம்ஜின் ஆற்றில் கலந்துள்ள ரத்தம் பிற விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட காரணமாக அமையும் என அங்குள்ள மக்களிடையே பெரும் கவலை எழுந்துள்ளது. ஆனால் பன்றிகள் நோய் தொற்று நீக்கப்பட்ட பின்னர்தான் கொல்லப்பட்டதாகவும், அதனால் மக்கள் பயப்பட வேண்டாம் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் இம்ஜின் ஆற்றில் ரத்தம் கலக்காமல் இருக்க அவசர கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.