ஃபேஸ்புக் மூலமாக பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி, சுமார் ஒன்றை லட்சம் சுருட்டி கொண்டு சென்றவரை போலீசார் கைது செய்துள்ளார்கள். சென்னையில் உள்ள மயிலாப்பூரில் வசித்து வருபவர் சியாமளா (31). இவருக்கு திருமணம் ஆகி பின்னர் விவாகரத்து ஆனவர்.
இவர் பிசியோதெரப்பிஸ்ட், தேனாம்பேட்டையில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், மீஞ்சூரில் இருக்கும் ஜெயச்சந்திரன் (41) என்பவருக்கு ஓராண்டுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் நட்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து ஃபேஸ்புக்கில் சாட் செய்து வந்த இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. சியாமளாவை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஜெயச்சந்திரன் பழகியுள்ளார். அவரிடமிருந்து நகை, பணம் வாங்கி தாராளமாக செலவு செய்துவந்துள்ளார்.
கொஞ்ச நாட்களாக சியாமளாவுடன் பேசுவதைக் குறைத்துக்கொண்டுள்ளார் ஜெயச்சந்திரன். ஒரு கட்டத்தில் முற்றிலுமாக பேசுவதை நிறுத்திவிட்டார். தொடர்ந்து தொடர்புகொண்டு ஜெயச்சந்திரனை தொடர்புகொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சியாமளா, மயிலாப்பூர் போலீசில் புகார் செய்தார். ஜெயச்சந்திரனை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.