நாடளாவிய ரீதியில் கோத்தபாயவின் வெற்றி கொண்டாட்டம்!

பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து நாடளாவிய ரீதியில் அவரின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களிலும் வெற்றிக்கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, காரைதீவு, கல்முனை, சாய்ந்தமருது உள்ளிட்ட பிரதேசங்களில் வெற்றியை கொண்டாடும் முகமாக இனிப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர பட்டாசு கொளுத்தி தத்தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மக்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்துகின்ற நிலையில், அங்குள்ள பெரும்பாலான வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டு வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

அதேபோல வவுனியாவிலும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் அலுவலகத்தில் இருந்து பேரணியாக வாகனங்களில் வந்த ஆதரவாளர்கள் வவுனியா நகர் வழியாக பேரணியாக சென்றதோடு வெடிகொழுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மற்றுமொரு ஆதரவாளர் குழு, முன்னாள் இராணுவத்தளபதியாக இருந்த கொப்பேகடுவவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்த கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் , ஈ.பி.டி.பி கட்சியினர் தமது கட்சி கொடியினை ஏந்தியவாறு வவுனியா வீதியேங்கும் பேரணியாக வாகனங்களில் சென்றனர்.

அதேபோல மட்டக்களப்பு நகரை அண்டிய பிரதேசங்களில் மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரத்தடி, மஞ்சந்தொடுவாய், கல்லடி, மத்திய வீதி, அரசடி சந்தி, ஊறணி போன்ற இடங்களில் பட்டாசு கொளுத்தி வெற்றிக்கொண்டாட்டங்களில் ஈடுபட்டதோடு மணிக்கூட்டுக் கோபுரத்தில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ போன்றோரின் உருவப்படங்கள் பதாதைகளாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக இன்று காலை பட்டாசுகள் கொழுத்தி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

அக் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் உட்பட மாநகரசபை, பிரதேசசபை உறுப்பினர்கள், இளைஞர் அணியினர் என பலர் கலந்துகொண்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எம்.எஸ்.எம்.சியாட் தலைமையில் காத்தான்குடியில் பொதுமக்கள் பட்டாசு கொழுத்தி தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.