தமிழகத்தில் ‘விஸ்வாசம்’ சாதனையை முறியடித்தது ‘பிகில்’: இதர சாதனைகளின் பட்டியல்!

தமிழகத்தில் ‘விஸ்வாசம்’ சாதனையை முறியடித்துள்ளது ‘பிகில்’ திரைப்படம். மேலும், இதர மாநிலங்களில் செய்த சாதனைகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘பிகில்’. ஏஜிஸ் நிறுவனம் தயாரித்த அந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார். நயன்தாரா, டேனியல் பாலாஜி, இந்துஜா, கதிர், ஜாக்கி ஷெராஃப், வர்ஷா பொல்லாமா, ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்திருந்தனர்.

ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் அக்டோபர் 25ம் திகதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. 180 கோடி ரூபாய் பொருட் செலவில் உருவாக்கப்பட்ட படம் என்பதால், பலரும் இது சாத்தியமில்லை என்றே கருதினார்கள். ஆனால், அனைத்து சாதனைகளையும் உடைத்தது ‘பிகில்’ படத்தின் வசூல்.

தற்போது, ‘பாகுபலி 2’ படத்துக்குப் பிறகு தமிழகத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையையும் படைத்துள்ளது. தமிழகத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தின் மொத்த வசூல் 135 கோடி ரூபாய்க்கும் அதிகம். இதனை ‘பிகில்’ படத்தின் மொத்த வசூல் முறியடித்து 140 கோடி ரூபாய்க்கும் அதிகம் என்ற இமாலய இலக்கை எட்டியுள்ளது.

‘பிகில்’ படத்தின் வசூல் செய்துள்ள சாதனைகளின் பட்டியல் இதோ: (அனைத்துமே மொத்த வசூல் அடிப்படையிலானது)

* தமிழகத்தில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படங்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது ‘பிகில்’. ஆனால், தெலுங்குப் படமான ‘பாகுபலி 2’ படத்தின் வசூலே தமிழகத்தில் அதிக வசூல் செய்த படங்களின் வரிசையில் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த ஆண்டு இந்திய அளவில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படங்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது ‘பிகில்’. அதே போல் தென்னிந்தியாவிலிருந்து இந்திய அளவில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த நடிகர்கள் பட்டியலில் ரஜினி, பிரபாஸ், யாஷ் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். அந்தப் பட்டியலில் இப்போது விஜய்யும் இணைந்துள்ளார்.

* கேரளாவில் தமிழ்ப் படங்களின் வசூலில் ‘பிகில்’ படத்தின் வசூலே அதிகம்.

* தெலுங்கில் வெளியான விஜய் படங்களின் வசூலில் ‘பிகில்’ படமே அதிகம்.

* வெளிநாடுகளில் அதிக வசூல் செய்யும் தமிழ் நடிகர்கள் பட்டியலில் ரஜினிதான் எப்போதுமே நம்பர் ஒன். தற்போது அந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துவிட்டார் விஜய். ‘பிகில்’ படம் ரஜினி படங்களின் வசூல் பட்டியலுக்கு அப்புறமே இருந்தாலும், பல்வேறு வெளிநாடுகளில் ரஜினி படங்களின் வசூலையும் முறியடித்துள்ளது.

* மலேசியாவில் ஷாருக் கானின் ‘தில்வாலே’, ரஜினி நடித்த ‘கபாலி’ ஆகிய படங்களுக்குப் பிறகு அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது ‘பிகில்’.

* இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது ‘பிகில்’.

* இந்த ஆண்டு உலக அளவிலும், இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் அதிக வசூல் செய்த தமிழ்[ படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது ‘பிகில்’.

* கர்நாடகாவில் தமிழ்ப் படங்களுக்கு போதிய வரவேற்பு இருக்காது. ஆனால், ‘பிகில்’ படத்தை வாங்கி வெளியிட்டவருக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது.

இவ்வளவு சாதனைகள் படைத்திருந்தாலும், இந்தப் படத்துக்காகச் செய்த முதலீட்டை இப்போதுதான் எடுத்துள்ளனர். இதற்குப் பிறகு வரும் வசூலே லாபகரமாக அமையவுள்ளது. அதேபோல், அமெரிக்காவில் இந்தப் படம் நல்ல வசூல் செய்திருந்தாலும், பெரும் விலை கொடுத்து வாங்கியிருப்பதால் சிறிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

‘பிகில்’ படத்தின் பிரம்மாண்டமான வசூலின் மூலம், ரஜினிக்குப் பிறகு வெளிநாடு, இந்தியா, தமிழ்நாடு என அனைத்து விநியோகிஸ்தர்களுக்கும் வசூல் நாயகனாக வலம் வர ஆரம்பித்துள்ளார் விஜய்.