சிங்கப்பூரில் உள்ள போர் நினைவிடத்தில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் வந்துள்ளார். சிங்கப்பூரில் நேற்று துணைப் பிரதமர் ஹெங் ஸ்வீ கீட்டை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது இந்தியா-சிங்கப்பூர் நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இந்த சந்திப்பைத் தொடர்ந்து சிங்கப்பூரில் உள்ள இந்திய வம்சாவளியினர் இடையே ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.
இந்நிலையில், சிங்கப்பூரின் கிராஞ்சியில் உள்ள போர் நினைவிடத்திற்கு சென்ற ராஜ்நாத் சிங், இரண்டாம் உலகப்போரின்போது உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அங்குள்ள பார்வையாளர் குறிப்பேட்டில், தனது கருத்தை பதிவிட்டு கையெழுத்திட்டார்.
இதனைத் தொடர்ந்து இந்தியா-சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை மந்திரிகளின் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.