ஓய்வு தொடர்பில் மலிங்கா வெளியிட்ட முக்கிய தகவல்

இலங்கை டி-20 கிரிக்கெட் அணித்தலைவரும், நட்சத்திர பந்து வீச்சாளருமான லசித் மலிங்கா, டி-20 போட்டிகளில் தான் இன்னும் விளையாட உள்ள காலம் குறித்து தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு பெற்ற நிலையில் லசித் மலிங்கா, தற்போது இலங்கை அணிக்காக டி-20 போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

தற்போது அபுதாபியில் நடைபெற்று வரும் டி-10 தொடரில் நொர்தென் வொரியர்ஸ் அணிக்காக விளையாடி வரும் மலிங்கா கூறியதாவது, உலகளவில் நடைபெற்று வரும் டி-20 தொடர்களில் நான் விளையாடியுள்ளேன். அந்த அனுபவம் எனக்கு உள்ளது. எனவே, ஒரு பந்துவீச்சாளராகவும், ஒரு சிறந்த அணித்தலைவராகவும் என்னால் செயற்பட முடியும்.

அத்துடன், நான் இன்னும் 2 வருடங்களுக்கு டி-20 போட்டிகளில் விளையாட முடியும் என நம்புகிறேன். டி-20 உலகக் கோப்பை தொடருக்கான இலங்கை அணி தலைவராக செயற்பட வேண்டும் என கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

ஆனால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தொடர்பில் தெரியாது. எவ்வாறாயினும், டி-20 போட்டிகளில் 4 ஓவர்கள் மாத்திரமே வீசவேண்டும். எனது திறமையை பயன்படுத்தி என்னால் விளையாட முடியும்.

இலங்கை அணி திறமையான பந்துவீச்சாளர் ஒருவர் இல்லாமல் தடுமாறுகிறது. குறிப்பாக பந்துவீச்சாளர்களிடம் தொடர்ந்து நேர்த்தியாக பந்துவீசும் தன்மை குறைவு. அதனை ஒன்று அல்லது ஒன்றரை வருடங்களில் சரிசெய்துவிட முடியாது.

நாம் பொறுமையாக இருக்க வேண்டும். இதற்கு மூன்று ஆண்டுகள் எடுக்கலாம். அதற்கு வீரர்களின் நிலைத்தன்மை அவசியம். தேர்வுக்குழு இதில் அவதானம் செலுத்த வேண்டும் என லசித் மலிங்கா தெரிவித்துள்ளார்.