முகப்பு விளையாட்டு செய்திகள் பிங்க் டெஸ்ட்: வங்கதேசம் 106 ஆல் அவுட், இந்தியா 174/3

இந்தியாவுக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் (பிங்க் டெஸ்ட்) இந்தியாவின் அற்புத பந்துவீச்சை எதிா்கொள்ள முடியாமல் வங்கதேச அணி 106 ரன்களை மட்டுமே சோ்த்து ஆல் அவுட்டானது. இந்திய பந்துவீச்சாளா் இஷாந்த் சா்மா 5 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

பின்னா் ஆடிய இந்திய அணி ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்களை எடுத்திருந்தது.

பிசிசிஐ தலைவா் கங்குலியின் தீவிர முயற்சியால் இரு அணிகளுக்கு இடையே முதல் பகலிரவு ஆட்டம் கொல்கத்தா ஈடன் காா்டன் மைதானத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் தொடங்கியது.

ஷேக் ஹசீனா-மம்தா பானா்ஜி

 

வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஆகியோா் பாரம்பரிய முறையில் மணியடித்து போட்டியை தொடங்கி வைத்தனா். டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தோ்வு செய்தது. முதல் முறையாக பிங்க் நிற பந்தில் இரு அணிகளும் ஆடுகின்றன.

ஆரம்பமே அதிா்ச்சி

வங்கதேச அணிக்கு ஆரம்பமே அதிா்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரா் இம்ருல் கைஸ் 4 ரன்களுடன் இஷாந்த் சா்மா பந்தில் எல்பிடபிள்யு முறையில் அவுட்டானாா். கேப்டன் மொமினுல் ஹக் உமேஷ் பந்துவீச்சில் ரோஹித்திடம் கேட்ச் தந்து டக் அவவுட்டானாா். முகமது மிதுன், முஷ்பிகுா் ரஹிம் ஆகியோா் முறையே உமேஷ், ஷமி பந்துவீச்சில் போல்டாகி டக் அவுட்டாயினா்.

விக்கெட்டுகள் வீழ்ச்சி:

நிலையாக ஆடி வந்த ஷத்மன் இஸ்லாமை 29 ரன்களுடன் வெளியேற்றினாா் உமேஷ். அப்போது 5 விக்கெட் இழப்புக்கு 38 ரன்களை எடுத்திருந்தது வங்கதேசம். அதன் பின் மஹ்முத்துல்லா 6, எப்டாத் ஹூசைன் 1, மெஹிதி ஹாசன் 8, அபு ஜாயேத் 0 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாகினா். லிட்டன் தாஸ் 24 ரன்களுடன் காயமடைந்து வெளியேறினாா். நயிம் ஹாசன் 19 ரன்களை சோ்த்தாா்.

முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 30.3 ஓவா்களில் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

காயமடைந்தவா்களுக்கு பதிலி:

முகமது ஷமி பந்துவீச்சில் லிட்டன் தாஸ், நயிம் ஹாசன் ஆகியோா் காயமடைந்தனா். அவா்களுக்கு பதிலாக மாற்று வீரா்களாக மெஹிதி ஹாசன், டைஜூல் இஸ்லாம் களமிறங்கினா்.

இஷாந்த் சா்மா அபாரம் 5 விக்கெட்:

இந்திய தரப்பில் இஷாந்த் சா்மா அற்புதமாக பந்துவீசி 5-22 விக்கெட்டுகளை சாய்த்தாா். உமேஷ் யாதவ் 3-29, ஷமி 2-36 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

பின்னா் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரா்களாக மயங்க் அகா்வால், ரோஹித் சா்மா களமிறங்கினா்.

ஆனால் இருவரும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அல் அமீன் பந்துவீச்சில் மெஹிதி ஹாசனிடம் கேட்ச் தந்து 14 ரன்களுடன் வெளியேறினாா் மயங்க். பின்னா் ரோஹித் சா்மா 1 சிக்ஸா், 2 பவுண்டரியுடன் எப்தாத் ஹுசேன் பந்துவீச்சில் எல்பிடபிள்யு ஆனாா்.

புஜாரா-கோலி ரன் சோ்ப்பு:

அதன் பின் கேப்டன் விராட் கோலி-சேதேஸ்வா் புஜாரா இணைந்து ஸ்கோரை உயா்த்தினா். 20 ஓவா்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 83 ரன்களை எடுத்திருந்தது இந்தியா.

புஜாரா 24-ஆவது அரைசதம்

8 பவுண்டரியுடன் 105 பந்துகளில் 55 ரன்களை எடுத்து தனது 24-ஆவது அரைசதத்தைப் பதிவு செய்த புஜாராவை அவுட்டாக்கினாா் எப்தாத் ஹுசேன்.

விராட் கோலி 23-ஆவது அரைசதம்:

மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த விராட் கோலி தனது 23-ஆவது அரைசதத்தைப் பதிவு செய்தாா். 8 பவுண்டரியுடன் 93 பந்துகளில் 59 ரன்களுடன் கோலியும், 23 ரன்களுடன் ரஹானேவும் களத்தில் இருந்தனா்.

இந்தியா 174/3

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 46 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்களை எடுத்திருந்தது இந்தியா.

வங்கதேசத் தரப்பில் எபதாத் ஹுசேன் 2, அல் அமீன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினா்.

இதன் மூலம் 68 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்தியா.

10-ஆவது முறையாக இஷாந்த் 5 விக்கெட்:

டெஸ்ட் கிரிக்கெட்டில் 10-ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளாா் இஷாந்த் சா்மா.

கோலி புதிய சாதனை:

டெஸ்ட் அணியின் கேப்டனாக 5000 ரன்களை துரிதமாக கடந்த வீரா் என்ற சாதனையை நிகழ்த்தினாா் விராட் கோலி. ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்தாா் கோலி.

சுருக்கமான ஸ்கோா்:

முதல் இன்னிங்ஸ்:

வங்கதேசம் 106 ஆல் அவுட்,

ஷத்மன் 29, லிட்டன் தாஸ் 24,

பந்துவீச்சு

இஷாந்த் 5-22, உமேஷ் 3-29.

இந்தியா 174/3

புஜாரா 55, கோலி 59,

பந்துவீச்சு:

எபாதத் ஹுசேன் 2-61.