ஊழியரை மிரட்டிய முதலாளிக்கு சிறை..!!

தம் மனைவியுடன் தமது ஊழியர் தகாத தொடர்பு வைத்திருப்பதை அறிந்த 44 வயது ஆடவர் ஹான் போ, சமையலறையில் இருந்த வெட்டுக் கத்தியை எடுத்து அந்த ஊழியரை மிரட்டியதுடன் நில்லாமல் சுடுநீரையும் ஊழியர்மீது ஊற்றினார்.

இந்தக் குற்றச் செயலுக்காக ஹான் போவுக்கு ஒன்பது மாத சிறைத் தண்டனை கடந்த வியாழக்கிழமை விதிக்கப்பட்டது.

சீன நாட்டவரான ஹான் சிங்கப்பூரில் நிரந்தரவாசத் தகுதி உடையவர். பழங்களை விநியோகிக்கும் தொழிலைத் தொடங்கிய அவர், மலேசியரான 22 வயது கான் சீ வாய்யை விநியோக ஓட்டுநராகப் பணிக்கு அமர்த்தினார்.

கடந்த ஆண்டு மே மாதம் ஹானின் மனைவி லெஸ்லீ சீ லே சின்னும் ஊழியர் கானும் திரு ஹான் வீட்டுப் படுக்கையறையில் இருந்ததைக் கண்டதும் அவ்விருவருக்கும் இடையே தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டினார் ஹான்.

வீட்டுக் கூடத்துக்குச் சென்ற அந்த மூவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஹான், சமையலறைக்குள் நுழைந்து ஒரு வெட்டுக்கத்தியை எடுத்துக்கொண்டார் என அரசுத் தரப்பில் கூறப்பட்டது. வேறொரு கத்தியை அவர் கால்சட்டைப் பையில் வைத்திருந்ததாகவும் கூறப்பட்டது.

திரு கானை வெட்டுக்கத்தியால் தாக்கி கடுங்காயத்தை விளைவிக்கப்போவதாக ஹான் மிரட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் இரண்டு கத்திகளையும் கீழே வைத்த ஹான், கேத்தலில் இருந்த சுடுநீரை திரு கானின் மீது ஊற்றினார். அதில் கானின் முகம், கழுத்து, கை ஆகியவற்றின்மீது சுடுநீர் விழுந்தது. அவரது இடது கண்ணுக்குள்ளும் சிறிது சுடுநீர் புகுந்தது.

பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட கானின் உடலில் சுமார் 7% அளவுக்கு சூட்டுக் காயங்கள் இருந்தன.

நான்கு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவருக்கு 45 நாட்கள் மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டது.

திரு கானின் சிகிச்சைக்கு $9,000 செலவானது.

ஹான் தம்பதிக்கு 8, 9 வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

திரு கானுடனான நட்பு ஏற்படுவதற்கு முன்புவரை தம்மிடம் மனைவி மிகவும் அன்பாக நடந்துகொண்டதாக தமது வழக்கறிஞர் மூலம் ஹான் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

சுமார் 10 ஆண்டுகளாக சீனாவுக்குச் செல்லாத திரு ஹான், வேலைக்கு உதவியாக திரு கானைப் பணிக்கமர்த்திய பிறகு உறவினர்களைச் சந்திப்பதற்காக சீனா சென்றார். சில மாதங்களுக்குப் பிறகு சிங்கப்பூர் திரும்பிய ஹானிடம் அவரது மனைவி முன்புபோல அன்புடன் இருக்கவில்லை.

தம் தாயார் திரு கானுடன் நெருக்கமாக இருப்பதாக மகள்களும் ஹோவிடம் குறிப்பிட்டதாக நீதிமன்றத்தில் குறிப்பிட்டார் ஹானின் வழக்கறிஞர்.

தமது குடும்பத்தை விட்டு விலகிச் செல்ல திரு கானுக்குப் பணம் கொடுக்க ஹான் முன்வந்ததாகச் சொல்லப்பட்டது.

ஆனால், திரு கானுடன் வாழவே ஹானின் மனைவி விரும்பியதாகவும் ஹான் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.