வாட்ஸ்அப் செயலியில் வேகமாக பரவும் வைரல் வீடியோ ஒன்றில், கருவுற்ற பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை தாயின் குடலை தின்றதால் தாய் இறந்ததாகவும், குழந்தை வெளியே எடுக்கப்பட்டதும் அருகில் இருந்த செவிலியர் உயிரிழந்ததாகவும், குழந்தை வெளியே எடுக்கப்படும் போதே அதன் எடை 8 கிலோ வரை இருந்ததாக பகீர் தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.
வைரல் வீடியோவுடன் பரவும் குறுந்தகவல் பின்வருமாறு,
கலிகால பிரசவம் அஸ்ஸாமில் ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு. டாக்டர்கள் வயிற்றில் ஆப்ரேஷன் செய்து குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். வயிற்றில் அக்குழந்தை தன் தாயின் குடல் முழுவதும் தின்றதால் தாய் உயிரிழப்பு. அக்குழந்தையை வெளியே எடுத்த நர்ஸ் 3 மணி நேரத்தில் உயிரிழப்பு. அக்குழந்தை அகன்ற வாயுடன் கோரை பற்களுடன் பிறந்துள்ளது. பிறக்கும் போது 8கிலோ எடையில் இருந்தது 24மணி நேரத்தில் அக்குழந்தையின் எடை 13 கிலோவாக அதிகரிக்க மருத்துவர்கள் 17 விஷ ஊசி போட்டு குழந்தையை கொன்றனர். இது உண்மையில் நடந்த சம்பவம் என கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள ஆய்வு செய்ததில், குழந்தை பிறந்தது மட்டும் உண்மை என தெரியவந்துள்ளது. மற்றப்படி குழந்தை தாயின் குடலை தின்றது, குழந்தை வெளியே எடுக்கப்பட்டதும் செவிலியர் உயிரிழந்தது, பிறக்கும் போது அதன் எடை 8 கிலோ போன்ற தகவல்களில் துளியும் உண்மையில்லை என தெரிகிறது.
குழந்தை தொடர்பான வைரல் வீடியோ பற்றி இணையத்தில் தேடியபோது, குழந்தை ஹர்லிகுயின் இத்யோசிஸ் எனும் மரபணு குறைபாடுடன் பிறந்துள்ளதாக பல்வேறு இணையத்தள செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இதுபோன்ற சம்பவம் 2016 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் நடைபெற்று இருப்பதாக அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஹர்லிகுயின் இத்யோசிஸ் எனும் குறைபாடு உலகில் பிறக்கும் குழந்தைகளில் மூன்று லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் மரபணு குறைபாடு காரணமாக ஏற்படுகிறது. இவ்வாறு பிறக்கும் குழந்தைகளின் சருமம் தடிமனாக இருக்கும்.
மேலும் குழந்தைகளின் சருமம் வெடிப்பு ஏற்பட்டிருக்கும். முகத்தில் வாய், கண்கள், காது உள்ளிட்டவை சரியாக வளர்ந்து இருக்காது. இந்த நோயை மருத்துவர்கள் ‘ABCA 12’ எனும் மரபணு குறைபாடு என குறிப்பிடுகின்றனர். இதுவரை இந்தியாவில் இதுபோன்று மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன. இவ்வாறு பிறந்த குழந்தைகள் அனைத்தும் பிறந்த சில மணி நேரங்களில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
வாட்ஸ்அப் தகவல்களில் இருப்பதை போன்று இந்த குழந்தை அஸ்ஸாமில் பிறக்கவில்லை. இதே குறைபாடுள்ள குழந்தை டெல்லி கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் பிறந்திருக்கிறது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.