முல்லைத்தீல் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இன்று படம் எடுத்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை பின்தொடர்ந்த புலனாய்வுப்பிரிவினரும் பொலிஸாரும் புதுக்குடியிருப்பு தேக்கம் காட்டுப்பகுதியில் அவர்களை இடைமறித்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் சில மாணவர்கள் முல்லைத்தீவிற்கு இன்று சென்றுள்ளனர். அங்கு சென்ற மாணவர்கள் முள்ளிவாய்க்காலில் உள்ள நினைவுத் தூபிக்கும் சென்றுள்ளனர். அப்போது அங்கு புகைப்படங்கள் எடுத்துள்ளனர். அவர்கள் புகைப்படங்கள் எடுத்ததை அவதானித்த புலனாய்வுப் பிரிவினர் பல்கலைக்கழக மாணவர்களை பின்தொடர்ந்துள்ளனர்.
முல்லைத்தீவு பொலிசாரும் அவர்களின் பின்னால் நோட்டமிட்டு சென்றுள்ளனர். மாணவர்கள் தங்கள் பயணத்தை முடித்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துள்ளனர். அப்போதும் மாணவர்களை புலனாய்வாளர்கள் பின்தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில் புதுக்குடியிருப்பு தேக்கம் காட்டுப்பகுதியில் வைத்து வழிமறித்த பொலிஸார் எங்கிருந்து வருகிண்றீர்கள்? எதற்காக முல்லைவாய்க்கால் நினைவுத் தூபிக்கு செண்றீர்கள்?என மாணவர்களை துருவித் துருவி விசாரித்துள்ளனர்.
மேலும், நீங்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு சென்று வருகின்றீர்கள், அங்கு புகைப்படங்கள் எடுத்து வருகின்றீர்கள் என எங்களுக்கு தகவல் வந்துள்ளது. அதனாலேயே உங்களை விசாரணை செய்கின்றோம் என்பதையும் பொலிஸார் மாணவர்களுக்கு கூறியுள்ளனர்.
மாணவர்களை நடு வீதியில் வைத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சில மணி நேரத்தின் பின்னர் விடுத்துள்ளனர்.
இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் வளாகத்துக்குள் மாணவர்கள் உள்நுழைய தடை விதித்திருந்தது.என்னும் தடையை மீறி உணர்வு பூர்வமாக மாவீரர்களுக்கு மாணவர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இவ்வாறான நிலையில் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை கடந்த இரு நாட்களாக புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் பின்தொடர்வதாக அச்சம் வெளியிட்டுள்ளனர்.