சென்னையில் செல்போனில் அதிக நேரம் செலவிட்ட மகளை தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை செட்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி. வெல்டிங் வேலை செய்து வரும் இவருக்கு வித்யாஸ்ரீ என்ற மகள் இருக்கிறார்.
வித்யாஸ்ரீ திருவொற்றியூரில் உள்ள அரசு கலை கல்லூரியில் பி.ஏ. தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், வித்யாஸ்ரீ செல்போனில் பப்ஜி கேம் ஆடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இதனால், தினமும் காலை சீக்கிரமாக எழுந்து பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது தாய், காலையிலேயே செல்போன்ல அப்படி என்ன தாண்டி பாக்குற என திட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த வித்யாஸ்ரீ தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், கடைக்கு சென்று வீடு திரும்பிய அவரது தாய், வீட்டின் கதவு மூடியிருந்ததையடுத்து, கதவை திறக்குமாறு கத்தியுள்ளார்.
ஆனால், நெடுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது மகள் தூக்கில் சடலமாக தொங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்துபோன தாய் கதறி அழுதுள்ளார்.
பின்னர், பொலிசாருக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், வித்யாஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் செல்போனில் ‘பப்ஜி கேம்’ விளையாடுவதை தாய் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என விசாரித்து வருகின்றனர்.