ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த மக்களின் ஆணையை மதித்து ஆட்சி நிர்வாகத்தை கொண்டு நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
பெலவத்தையில் உள்ள முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களாக நாட்டில் நடந்த சில சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பாகவும் ஹந்துன்நெத்தி கருத்து வெளியிட்டுள்ளார்.
புலனாய்வுப் பிரிவினருக்கு அடக்குமுறை வந்துள்ளது. ஊடகவியலாளர்களுக்கும் அடக்குமுறை வந்துள்ளது. பொலிஸார் மற்றும் மக்களும் அடக்குமுறை வந்துள்ளது.
இதனை நாம் எப்படி புரிந்துக்கொள்வது. பொது பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு என்பது தாம் விரும்பாதவர்களை அடக்கி, தாம் விரும்பியவர்களை சேவையில் ஈடுபடுத்துவது அல்ல.
நடந்த சம்பவங்களை பார்க்கும் போது வெள்ளை வான் கலாசாரம், கடத்தல் கலாசாரம், அரச அடக்குமுறை கலாசாரம் மீண்டும் நடக்கலாம் என வெளிகாட்டப்பட்டுள்ளது.
இந்தளவுக்கு துரிதமாக இப்படியான சம்பவங்கள் நடக்கும் என்று இந்த அரசாங்கத்தை பதவிக்கு கொண்டு வர பாடுபட்ட சக்திகளும் மக்களும் நம்பியிருக்க மாட்டார்கள்.
பொலிஸாருக்கு பயந்து திருடன் நாட்டை விட்டு தப்பியோடுவான் என்று நாங்கள் வரலாற்றில் கேட்டுள்ளோம், ஆனால் திருடர்களுக்கு பயந்து பொலிஸார் தப்பியோடுவது தற்போது நடந்துள்ளது.
அதேவேளை கொழும்பில் உள்ள சுவிஸர்லாந்து தூதரகத்தின் பெண் ஊழியர் கடத்தப்பட்டமை மற்றும் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பாக சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன.
சுவிஸர்லாந்து தூதுவர் புதிய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளார்.
வெளிநாட்டு தூதரகத்தின் ஊழியர் கடத்தப்பட்டமை தொடர்பாக தெளிவுபடுத்துவது புதிதாக வெளிவிவகார அமைச்சராக பதவியேற்ற தினேஷ் குணவர்தனவின் முதலாவது உத்தியோகபூர்வக பணியாக அமைந்துள்ளது.
இந்தியாவுக்கு முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி முதலில் தெளிவுப்படுத்த வேண்டியது இந்த சம்பவம் குறித்து என்றால், நாட்டை பற்றி நாங்கள் எதனை கூற முடியும்.
சர்வதேச ரீதியில் நாட்டுக்கு ஏற்பட போகும் தலைவிதி பற்றி நாம் என்ன கூற இருக்கின்றது. நாம் மகிழ்ச்சியடை முடியும் மக்கள் மகிழ்ச்சியடைய முடியுமா இது மிகவும் பாரதூரமான நிலைமை. இந்த சம்பவம் காரணமாக ராஜதந்திர பிரச்சினைகள் ஏற்படக் கூடும்.
அத்துடன் வரிகளில் திருத்தங்களை செய்து மானியங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்தாலும் நாடாளுமன்றத்தில் அதனை விவாதித்து நிறைவேற்றும் வரை இந்த வரி நிவாரணங்கள் குறித்து நம்பிக்கை கொள்ள முடியாது.
வரி குறைப்பு தொடர்பாக அரசியல்வாதிகள் தகவல் வெளியிட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரச நிறுவனம் இதுவரை இது சம்பந்தமாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.