அடிலெய்டில் நடந்து வரும் பாகிஸ்தானுக்கு எதிரான 2வது மற்றும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேரலிய வீரர் டேவிட் வோர்னர் முச்சதம் அடித்து பிரட்மன் சாதனையை முறியடித்துள்ளார்.
பாகிஸ்தான் வீரர் முகமது அப்பாஸ் பந்துவீச்சில் ஷோர்ட்பிட்சாக வீசப்பட்ட பந்தை வைட் மிட்ஓனில் பவுண்டரி அடித்து டேவிட் வோர்னர் டெஸ்ட் அரங்கில் தனது முதல் முச்சதத்தை பதிவு செய்தார்
அவுஸ்திரேலிய ஜாம்பவான் பிரட்மன் டெஸ்ட்டில் அதிகபட்ச ஸ்கோர் 334 ரன்கள்தான். ஒருமுறை பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 334 ரன்கள் அடித்த ஆஸி. முன்னாள் கப்டன் மார்க் டெய்லர் பிரட்மன் சாதனையை முறியடிக்க விரும்பவில்லை என்று கூறி டிக்ளேர் செய்தார்.
ஆனால், தற்போது டேவிட் வோர்னர் 335 ரன்கள் சேர்த்து மார்க் டெய்லர், பிரட்மன் சாதனையையும் முறியடித்துள்ளார்.
அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 127 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 589 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்துள்ளது. வோர்னர் 335 ரன்களிலும், மாத்யூ வோட் 38 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். லாபுசாங்கே 162 ரன்கள் சேர்த்தார். 2வது விக்கெட்டுக்கு லாபுசாங்கேவும், வோர்னரும் சேர்ந்து 361 ரன்கள் சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
டேவிட் வோர்னர் டெஸ்ட் போட்டியில் அடிக்கும் முதலாவது முச்சதம் இதுவாகும். கடந்த 2012ம் ஆண்டு மைக்கல் கிளார்க் (329) கடைசியாக இந்தியாவுக்கு எதிராக முச்சதம் அடித்திருந்தார். அதன்பின் 7 ஆண்டுகளுக்குப்பின் அவுஸ்திரேலிய வீரர் முச்சதம் அடித்துள்ளார்
அவுஸ்திரேலிய அணிக்காக முச்சதம் அடிக்கும் 7வது வீரர் டேவிட் வோர்னர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடிலெய்ட் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியி்ல் வீரர் ஒருவரின் தனிப்பட்ட ஸ்கோராக அவுஸ்திரேலிய ஜாம்பவான் பிரட்மன் 299 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இதை கடந்த 1936ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அடித்திருந்தார்.
இப்போது டேவிட் வோர்னர் 300 ரன்கள் அடித்து, பிரட்மனின் சாதனையை 83 ஆண்டுகளுக்குப்பின் முறியடித்துள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு டிசம்பரில் இங்கிலாந்துக்கு எதிராக கருண் நாயர் 303 ரன்கள் அடித்தார். அதற்கு பின் தற்போது டெஸ்ட் போட்டியில் வோர்னர் முச்சதம் அடித்துள்ளார். மேலும், இடதுகை வீரர்களில் முச்சதம் அடித்தவர்களில் முதல் வீரர் இலங்கை முன்னாள் கப்டன் குமார் சங்கக்கர. கடந்த 2014ம் ஆண்டு பங்களாதேஷூக்கு எதிராக 319 ரன்கள் சேர்த்திருந்தார்.
வோர்னர் தனது முச்சதத்தை 389 பந்துகளில் அடித்துள்ளார். இது அதிவேகமாக முச்சதம் அடித்தவர்கள் வரிசையில் 4வது வீரர் எனும் பெருமையை வோர்னர் பெற்றுள்ளார்.
அதிவேகமாக முச்சதம் அடித்தவர்களில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் 2007-08ம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிராக சென்னையில் நடந்த டெஸ்டில் 278 பந்துகளில் 300 ரன்களை எட்டினார்.
2வதாக 2003-04-ம் ஆண்டில் சிம்பாவேவுக்கு எதிராக மாத்யூ ஹைடன் 362 பந்துகளில் முச்சதம் அடித்தார். 2003-04ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக சேவாக் 354பந்துகளில் முச்சதம் அடித்துள்ளார்.