73 ஆண்டுகால சாதனையை தகர்த்தெறிந்த ஸ்டீவ் ஸ்மித்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மிக வேகமாக 7,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார்.

அசார் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணி, அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் நான்காவது வீரராகக் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 23 ரன்களைக் கடந்தபோது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக வேகமாக 7,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

73 ஆண்டுகளாக இச்சாதனைக்குச் சொந்தக்காரராக இருந்த இங்கிலாந்தின் வேலி ஹாமண்டை இன்றைய ஆட்டத்தில் ஸ்மித் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

இச்சாதனையை நிகழ்த்த வேலி ஹாமண்ட் மொத்தம் 131 இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்டார். ஆனால், ஸ்மித் தனது 121ஆவது இன்னிங்ஸிலேயே இச்சாதனையைத் தகர்த்தெறிந்துவிட்டார். ஸ்டீவ் ஸ்மித்துக்கு இது 70ஆவது டெஸ்ட் போட்டியாகும்.

இந்திய அணியின் பேட்டிங் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், விரேந்தர் சேவாக், கோஹ்லி ஆகியோர் 7,000 ரன்களைக் கடந்த வீரர்களின் பட்டியலில் ஸ்மித்தை விடப் பின்தங்கியே இருக்கின்றனர்.

சேவாக் 134 இன்னிங்ஸ்களிலும், சச்சின் 136 இன்னிங்ஸ்களிலும், கோலி 138 இன்னிங்ஸ்களிலும் இச்சாதனையை நிகழ்த்தியிருந்தனர்.