சூரத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி தொடரின் இறுதிப்போட்டியில் கர்நாடகம் தமிழ்நாடு அணிகள் போட்டியிட்டது. இந்த போட்டியில் தமிழ்நாடு அணி ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது.
லீக் சுற்று மற்றும் அரையிறுதி போட்டியின் முடிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற கர்நாடகம் தமிழ்நாடு அணிகள் இறுதிப் போட்டியில் இன்று விளையாடியது. இரண்டு அணிகளுமே சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட வீரர்களை களமிறக்கியது குறிப்பிடத்தக்கது. கர்நாடக அணி தரப்பில் லோகேஷ் ராகுல் மயங்க் அகர்வால் மணிஷ் பாண்டே கருண் நாயர் என நான்கு வீரர்கள் சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய வீரர்கள் களம் இறங்கினர்.
அதேபோல தமிழகத்திலும் ரவிச்சந்திரன் அஸ்வின் வாஷிங்டன் சுந்தர் தினேஷ் கார்த்திக் விஜய் ஷங்கர் போன்ற சர்வதேச போட்டிகளில் ஆடிய வீரர்களும் பாபா அபராஜித் முருகன் அஸ்வின் நடராஜன் போன்ற ஐபிஎல் அனுபவம் கொண்ட வீரர்களும் களமிறங்கினார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் முதலில் விளையாடிய கர்நாடக அணிக்கு லோகேஷ் ராகுல், இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வரும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல, மணிஷ் பாண்டே கருண் நாயர் ஆகியோர் உரிய பங்களிப்பை அளிக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 180 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் மணீஷ் பாண்டே 60 ரன்களை குவித்தார்.
181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழக அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை என்றாலும், சுமாரான தொடக்கத்தினனை தொடக்க ஆட்டக்காரர்கள் சாருக்கான் ஹரி நிஷாந்த் கொடுத்தனர். அதற்கடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 24 ரன்களிலும் கார்த்திக் 20 ரன்களிலும் விரைவில் அவுட்டாக, அதற்கடுத்து வந்த பாபா அபராஜித் 40 ரன்களும் விஜய்சங்கர் 44 ரன்களும் அடித்து நம்பிக்கை அளித்தனர்.
இறுதியில் போராடிய விஜய்சங்கர் கடைசி ஓவரின் முதல் ஐந்தாவது பந்தில் ரன் அவுட் ஆக தமிழக அணி வெற்றி வாய்ப்பு பறிபோனது. கடைசி பந்தினை சந்தித்த முருகன் அஸ்வின் ஒரு ரன் மட்டுமே எடுக்க, 179 ரன்களை மட்டுமே எடுத்து தமிழக அணி ஒரு ரன் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியை சந்தித்தது. இதேபோல அண்மையில் நடைபெற்று முடிந்த விஜயஹசாரே தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடிய கர்நாடக தமிழக அணிகள் போட்டியில், தமிழக அணி கர்நாடக அணியிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது