வங்கிகளின் 17 ஆயிரத்து 900 கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றிய நபர்கள்.!

இந்தியாவில் உள்ள வங்கிகளிடமிருந்து கடன் பெற்று மோசடி செய்த 51 பேர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாகவும் , அப்படி தப்பி சென்றவர்களால் சுமார் 17 ஆயிரத்து 900 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பாடு இருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த விளக்கத்தில், வங்கிகளிடமிருந்து கடன் பெற்று மோசடி செய்து  வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றவர்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் இதுவரை 51 பேர் தலைமறைவாகி வெளிநாடுகளுக்கு தப்பியதாக கூறினார்.

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளிடமிருந்து கடன் பெற்று மோசடி செய்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றவர்கள் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்திருப்பதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

அப்படி வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்றவர்களை இந்தியா அழைத்து வருவதற்கு சிபிஐ மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பாக  51 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி தப்பி சென்றவர்களை இன்டர்போல் மூலமாக எட்டு நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.