அவ்வை சண்முகி வேடம் போட்டுக்கொண்டு நபர் செய்த செயல்..

மதுரையில் நபர் ஒருவர் தன் பெற்றோரை காப்பாற்றுவதற்காக பெண் வேடமிட்டு வீடுகளில் வேலைப் பார்த்து வரும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன் அவ்வை சண்முகி என்ற படத்தில் தன் மனைவியை சமாதானம் செய்வதற்காக பெண் போல் வேடமிட்டு வீட்டு வேலை பார்த்திருப்பார், அது சினிமா தானே அதில் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்பவர்களுக்கு, தற்போது மதுரையில் நிகழ்ந்துள்ள சம்பவம் உண்மையிலும் அதுபோல நடக்கும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால், இங்கு மனைவிக்காக அல்ல, தனது பெற்றோருக்காகவே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மானாமதுரை மலையனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் மதுரை வரையிலும் லுங்கி மற்றும் சட்டையை அணிந்து சென்று, அங்கு இறங்கியதும் மறைவான இடத்திற்கு சென்று மேக்கப்புடன், நீண்ட தலைமுடியுடன் கூடிய விக் அணிந்து சேலை கட்டி பெண்ணாக வேடமிட்டுக் கொண்டு வீட்டு வேலைகளுக்கு செல்கிறார்.

இன்னும் திருமணம் செய்துகொள்ளாத ராஜவிற்கு 40 வயதாகிறது. முதலில், ஆணாகவே சென்று வேலைகளை கேட்ட போது, ஆண்களுக்கு வீட்டில் வேலையில்லையென்று பலரும் விரட்டியடித்துள்ளனர்.

அப்போது, தானே பெண்ணாக மாறினால் தான் வேலை கிடைக்கும் என்றெண்ணிய ராஜா, அன்றிலிருந்து பெண் போல வேடமிட்டு 3 வீடுகளில் வேலைப்பார்த்து சம்பாதித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதையறிந்த காவல் துறையினர் பெண் வேடம் போட்டு வீட்டு உரிமையாளர்களை நம்ப வைத்து வேலைக்கு சேர்வது தவறு, மேலும் இதுபோன்ற செயல் விபரீதத்தில் முடிய அதிக வாய்ப்பிருக்கிறது என்று ராஜாவை எச்சரித்துள்ளனர்.

மேலும், தனது பெற்றோரை சாகும் வரை கவலையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக வேலை செய்கிறார் அது வரை சரிதான். ஆனால், ஆண்களுக்கு வேலையே இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளனர்.