ரவா தோசை செய்யும் போது, அரிசி மாவை சேர்ப்பதற்கு பதிலாக அரிசியை ஊறவைத்து மிக்ஸியில் நைஸாக அரைத்து அதனுடன் ரவா, மைதா கலந்து தோசை செய்தால் தோசை சுவையாகவும், மொறுகலாகவும் இருக்கும்.
கோதுமை ரவையை ஒரு கப் ஊறவைத்து, மிக்ஸியில் அரைத்து, அதனுடன் அரை கப் உளுந்தையும் சேர்த்து இட்லிக்கு அரைப்பது போல நைஸாக அரைத்து, கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து இட்லி செய்தால் வித்தியாசமான சுவையாக இருக்கும்.
தயிர் பச்சடி நீர்த்துப் போய்விட்டால், சிறிது நிலக்கடலையை வறுத்து நைஸாக பொடி செய்து கலந்துவிட்டால், பச்சடி கெட்டியாகவும், சுவையாகவும் இருக்கும்.
பூண்டை எளிதாக உரிக்க, பூண்டை உரிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, குளிர்ந்த நீரில் போட்டு ஊற வைத்து விட்டு, பிறகு அதனை எடுத்து தோலை உரித்தால் சுலபமாக வந்து விடும்.
இட்லிக்கு அரிசி ஊறவைக்கும் போது அரிசியை நன்கு களைந்துவிட்டு வெதுவெதுப்பான வெந்நீரில் அரிசியை ஊறவைத்தால் இட்லி பு+ப்போல இருக்கும்.
சப்பாத்தி அதிகமாக மீந்து விட்டால் அவற்றை வெயிலில் காய வைத்து, நன்கு காய்ந்து உடைவது போல் ஆனதும் அவற்றை எண்ணெயில் பொரித்துச் எடுத்தால் சுவையாக இருக்கும். சப்பாத்தி வீணாகாமல் இருக்கும்.
பாயாசம் நீர்த்துவிட்டால் எந்த பாயாசமாக இருந்தாலும் அதில் இரண்டு டீஸ்பூன் சோள மாவு அல்லது பால் பவுடரை கரைத்து பாயாசத்தில் ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டால் பாயாசம் கெட்டியாகிவிடும்.