ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்களை இழந்து 207 ரன்களை குவித்து இந்திய அணிக்கு மலைப்பை ஏற்படுத்தி உள்ளது.
போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். வாஷிங்டன் சுந்தர் முதல் ஓவரிலேயே பவுண்டரி சிக்ஸர் பறக்க வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆரம்பித்தது. இரண்டாவது ஓவரில் தீபக் சாஹர் பந்துவீச்சில் தொடக்க ஆட்டக்காரர் லேண்டல் சிம்மன்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அதற்கடுத்து வந்த பிராண்டன் கிங் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஏவின் லூயிஸுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். ஏவின் லூயிஸு சிக்ஸர் மழையாகப் பொழிய 17 பந்துகளில் 4 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி அவுட்டாகி வெளியேறினார்.
அதற்கடுத்து வந்த சிம்ரோன் ஹெட்மையர் வந்த வேகத்திலேயே சிக்ஸர் மழை பொழிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரன் வேகமானது மின்னல் வேகத்தில் பறந்தது. இதற்கிடையே சிறப்பாக விளையாடிய பிரண்டன் கிங் 23 பந்துகளில் 3 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 31 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் பொல்லார்ட் சிக்சர் மழை பொழிய சிம்ரன் ஹெட்மையர் அரைசதம் அடித்தார். ஹெட்மையர் 41 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 55 ரன்களை எடுத்து சாகல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் பொல்லார்டும் 19 பந்துகளில் 1 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் வந்த ஜேசன் ஹோல்டர் 9 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்கள் விளாசி 24 ரன்களை குவிக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 207 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி அடித்துள்ளது. இந்திய அணி தரப்பில் தீபக் சாஹர், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்த, சாஹல் 2 விக்கெட்களை வீழ்த்தினார். இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவருமே ஓவருக்கு ஏழு ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்தனர். குறிப்பாக தீபக் சாஹர் 4 ஓவர்களை வீசி 56 ரன்கள் கொடுத்து ஏமாற்றம் அளித்தார்.
இந்திய அணி பல கேட்சிகளை தவிர விட்டதுடன், தொடர்ச்சியாக சிக்ஸர்களை வாரி வழங்கி வந்தது. மொத்தம் வெஸ்ட் இண்டீஸ் அணி 15 சிக்ஸர்களை விலகியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சாஹலின் ஒரு ஓவரில் தொடர்ச்சியாக மூன்று கேட்சிகளை வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரோகித் சர்மா விட்டதுடன், பந்தை சிக்சருக்கும் அனுப்பிவிட்டனர். அதேபோல ராகுல் கோலியும் கேட்ச் செய்ய முயற்சித்து பவுண்டரிகளுக்கு அனுப்பிவைத்தனர். தீபக் சாஹர், வாஷிங்டன் சுந்தர், கோலி எளிதான பந்துகளை கூட தவறவிட்டு பவுண்டரிகளுக்கு அனுப்பிவைத்தனர். மொத்தத்தில் இந்திய அணியின் பீல்டிங் சொதப்பலாக அமைய வெஸ்ட் இண்டீஸ் அணி இமாலய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.
208 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு தொடக்கமானது அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல் ரோஹித் சர்மாவும் களமிறங்கினார். ஆரம்பம் முதலே லோகேஷ் ராகுல் பவுண்டரிகளை அடிக்க, ரோஹித் சர்மா தடுமாற்றத்துடன் விளையாடினார். 10 பந்துகளை சந்தித்த ரோகித் சர்மா 8 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு அணியின் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். ரோஹித் போலவே விராட் கோலியும் கடுமையான தடுமாற்றத்தை சந்தித்தார். மிகவும் மெதுவாக தொடங்கிய விராட் கோலி பிறகு அடித்து ஆட தொடங்கினார். அதுவரை மறுமுனையில் விளையாடி வந்த லோகேஷ் ராகுல் சிறப்பாக அடித்து ஆடி அரைசதத்தை கடந்தார். 40 பந்துகளில் 5 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 62 ரன்களை விளாசிய லோகேஷ் ராகுல் ஆட்டமிழந்து வெளியேறினார். முன்னதாக அவர் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் 1000 ரன்களை கடந்தார்.
அதன்பிறகு வந்த ரிஷப் பாண்ட் வந்த வேகத்தில் சிக்சருடன் ரன் கணக்கைத் தொடங்க 2 சிக்சர்கள் அடித்து திருப்தியுடன் 9 பந்துகளில் 18 ரன்களை அடித்து, தூக்கி அடித்த பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியை தொடங்கிய இந்திய அணி கேப்டன் விராட்கோலி அரை சதம் அடித்து அசத்தினார். இது சர்வதேச டி20 போட்டியில் அவருடைய 23ஆவது அரை சதமாகும் . இதன்மூலம் அதிக முறை ஐம்பதிற்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவை முந்தி முதலிடத்தை பிடித்துள்ளார்.
அதற்கு அடுத்து களமிறங்கிய பிறந்தநாள் வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 6 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சிவம் துபே கோலிக்கு மறுமுனையில் நின்று வேடிக்கை பார்க்க, இந்திய அணி இறுதியில் எளிதாக 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி 8 பந்துகளை மீதம் வைத்து வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக விளையாடிய விராட் கோலி 6 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 50 பந்துகளில் 94 ரன்கள் குவித்து நாட் அவுட்டாக இருந்து அசத்தினார். இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 15 சிக்ஸர் அடித்ததுபோல இந்திய அணியும் 12 சிக்ஸர்களை விளாசியது குறிப்பிடத்தக்கது
வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் உதிரி ரன்களை வாரி வழங்கி இந்தியாவிற்கு வெற்றிக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தனர். உதிரி வகையில் மட்டும் 23 ரன்களை வாரி வழங்கியது குறிப்பிடத்தக்கது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேசரிக் வில்லியம்ஸ் இந்த தொடரில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மூன்றாவது நடுவர் வழங்கும் நோபாலை 2 முறை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 3.4 ஓவர்களை மட்டுமே வீசி 60 ரன்களை வாரி வழங்கினார். அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் பியர் 4 ஓவர்களில் 44 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். கட்ரோல் கட்சிதமாக வீசி 4 ஓவர்களில் 24 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆனது 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.