இலங்கையில் தங்குவதற்கான விசா கடவுச்சீட்டு எதுவுமின்றி சட்டவிரோதமான முறையில் தங்கி இருந்த மாலைதீவு பிரஜை ஒருவர் கைதாகியுள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள கடைதொகுதி ஒன்றில் குறித்த பிரஜை கடவுச்சீட்டு மற்றும் விசா ஏதுவும் இன்றி சந்தேகத்திற்கிடமாக தங்கி இருப்பதாக புலனாய்வு தகவல் ஒன்றை அடுத்து கைதாகியுள்ளார்.
சனிக்கிழமை (7) மாலை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்.சூரிய பண்டாரவின் தலைமையின் கீழ் இயங்கும் கல்முனை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினை சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் வை அருணன், சார்ஜன்ட் ஏ.எல்.எம் றவூப் (63188), கான்ஸ்டபிள் கீர்த்தனன்(6873) ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேக நபரான மாலைதீவு நாட்டை சேர்ந்த இப்றாஹீம் ரசீட் (54) என்பவரை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைதான சந்தேக நபரிடம் மாலைதீவு நாட்டு அடையாள அட்டை, தொலைபேசி ஒன்று, ரெப் ரக உபகரணம் ஒன்று, வைத்திய அறிக்கைகள் அடங்கிய தோல் பை ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன் இலங்கையில் சட்டபூர்வமாக தங்கி இருப்பதற்கான எதுவித கடவுச்சீட்டோ குடிவரவு குடியகல்வு செய்வதற்கான விசாவோ அவர் வசம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கைதான நபர் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட் பின்னர் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பொலிஸ் விசாரணையின் அடிப்படையில் ஒருவருடமாக எதுவித கடவுச்சீட்டு மற்றும் விசா இன்றி சந்தேக நபர் தங்கி இருந்து வந்துள்ளமை வெளியாகி உள்ளது.
அண்மையில் மிரிஹான தடுப்பு முகாமில் சில தடுத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பிரஜைகள் தப்பி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.