தனியார் வகுப்புக்குச் சென்ற மாணவிகளுடன் சேட்டைவிட்ட நபர் பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு

மன்னார் அடம்பன் பகுதியில் தனியார் வகுப்புக்குச் சென்றுவிட்டு திரும்பிய மாணவிகள் இருவருடன் தகாத முறையில் நடக்க முயன்ற வவுனியா பூவரசங்குளத்தை சேர்ந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், அடம்பன் பகுதியை சேர்ந்த உயர்தரம் கற்கும் இரு மாணவிகள் நேற்று மாலை நேர வகுப்பு முடிவடைந்து வீடு சென்ற வேளையில், குறித்த பகுதியில் நபரொருவர் தகாத விதமாக நடந்து கொண்டதுடன் ஒரு மாணவியை தாக்கியும் கழுத்து மற்றும் கன்னத்தில் கடித்து குளத்தில் மூழ்கடிக்கவும் முயன்றுள்ளார்.

மற்றைய மாணவி தப்பித்து சென்ற நிலையில் கிராம மக்களின் உதவியுடன் சக மாணவியை மீட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் கிராம மக்களை பார்த்தவுடன் குளத்தினூடாக தப்பித்து சென்ற நிலையில் அடம்பன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

கிராம மக்களால் காப்பாற்றப்பட்ட இரு மாணவிகளும் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில் குறித்த நபர் இன்று காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பாக சட்டத்தரணிகளான டினேஷன் மற்றும் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் ஆகியோர் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் 18 ஆம் திகதி சந்தேக நபரை உறுத்திப்படுத்துவதற்கான அடையாள அணிவகுப்பிற்கும் உத்தரவிட்டுள்ளார்.