விளையும் பொருள் இயற்கையாக விளைந்தாலும், செயற்கையாக விளைந்தாலும் அதில் கலப்படம் செய்வது மட்டும் மாறவில்லை.
கலப்படம் செய்த பொருட்களை வாங்குவதால் பணத்திற்கும் கேடு, உண்பதால் உடம்பிற்கும் கேடு.
இப்படி உணவுப்பொருட்களில் நடக்கும் கலப்படங்களைக் கண்டறிய, உணவியல் நிபுணர்களும் வேதியியல் நிபுணர்களும் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை.
அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் சில உணவுப்பொருட்களில் இருக்கும் கலப்படங்களை நாமே சோதித்துத் தெரிந்துகொள்ளலாம்.
இதன்மூலம் நாம் உண்ணும் உணவுப்பொருட்கள் தரமானவையா என்பதைக் கண்டறியவும், தரமற்ற உணவுப்பொருள்களை வாங்குவதையும் தவிர்க்கவும் முடியும்.
ஆரோக்கியம் தரும் பாலில் கலப்படம்…
நீண்டகாலமாக நடந்துவரும் கலப்படங்களில் ஒன்று இது. பாலில் தண்ணீரை கலந்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பாலில் சோப்புத்தூள் கலந்து விற்கிறார்கள்.
சிறிதளவு பால் மற்றும் அதே அளவு தண்ணீரை ஒரு டம்ளரில் கலந்து, டம்ளரை நன்கு குலுக்கினால், சோப்புத்தூள் கலக்காத பால் என்றால் சிறிய அளவு நுரை மட்டுமே பாலின் மேற்பரப்பில் இருக்கும். சோப்புத்தூள் கலந்த பால் என்றால் அதிக அளவிலான நுரை, பாலின் மேற்பரப்பில் தேங்கியிருக்கும்.
இதன் மூலம் நீங்கள் எளிதில் பாலில் கலப்படம் உள்ளதா, இல்லையா எனக் கண்டறிய முடியும்.