சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் நுழைந்த ரௌடிகள், வைத்தியசாலைப் பணியாளர்களை தாக்கி காயப்படுத்தியதுடன், தளபாடங்களையும் சேதமாக்கியுள்ளனர்.
நேற்று (8) மாலை 6.00 மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
வெட்டுக்காயத்துடன் மருந்து கட்டுவதற்காக இரண்டு இளைஞர்கள் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு வைத்திய பரிசோதனைக்கு பின் மருந்து கட்ட வைத்தியசாலை பணியாளர்கள் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்த போது, தமக்கு உடனடியாக மருந்து கட்டவில்லை என்று தெரிவித்து அட்டகாசம் புரிந்த இருவரும், வைத்தியசாலை பணியாளர்களையும், தாதிய உத்தியோகத்தர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் சிலர் காயமடைந்தனர். வைத்தியசாலை தளபாடங்களும் சேதமடைந்தன.
அத்துடன், அங்கு கடமையிலிருந்த பாதுகாப்பு பணியாளர்களையும் இரும்பு கம்பிகளால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்போது அங்கு குழுமிய அப்பகுதி இளைஞர்கள், அட்டகாசத்தில் ஈடுபட்டவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து, முறையாக கவனித்து, சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இருந்தபோதும், ரௌடியொருவன் கைவிலங்கோடு பொலிஸாரிடம் இருந்து தப்பித்து ஓடியுள்ளான். எனினும் இளைஞர்கள் மீண்டும் அவனைப் பிடித்து, மீண்டும் கவனிப்பு கொடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
கைதான இருவரும் வேறு வழக்குகளில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதற்கு முன்னரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைத்து ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.