பொலிசார் சொல்வதில் உண்மையில்லை: மறுக்கிறது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!

மாணவர்கள் மது போதையில் வாகனம் ஓடியதனாலேயே அத்துமீறி உள்நுழைந்ததாகப் பொலிசார் சொல்வதில் உண்மையில்லை என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை 6 மணியளவில் உந்துருளியில் வந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும், போக்குவரத்துப் பொலீசாரும் கலைத்துக் கொண்டு வந்து, யாழ். பல்கலைக்கழகத்தினுள் அனுமதி பெறாமல் – அத்துமீறி உள்நுழைந்து மாணவர்களை அச்சுறுத்தியமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் ஊடகங்களிடம் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

பல்கலைக்கழக வளாகத்தினுள் ஆயுதம் தாங்கிய படையினர் எந்தக் காரணம் கொண்டும், அனுமதி பெறாமல் உள்ளே வருவதில்லை. இன்றைய தினம் மாணவர்கள் இருவரை வீதியிலிருந்து கலைத்துக் கொண்டு வந்து வளாகத்தினுள் வந்தது மட்டுமல்லாமல், துப்பாக்கியைக் காட்டி மாணவர்களை அச்சுறுத்தியுமுள்ளனர். அத்துமீறி உள் நுழைந்ததைத் திசை திருப்பும் வகையிலேயே மாணவர்கள் மது போதையில் இருந்ததாகப் பொலிசார் கூறுகின்றனர். இதில் உண்மையில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.