ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படாது என மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை அவர் மக்களவையில் விழுப்புரம் எம்.பி. டி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கான பதிலின்போது தெரிவித்தார்.
இன்று மக்களவையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், விழுப்புரம் தொகுதி எம்.பி.யுமான டி.ரவிக்குமார் ஈழத் தமிழர் பிரச்சினையில் ஒரு கேள்வி எழுப்பி இருந்தார்.
அதில் அவர், ”கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை அளிக்கப்படுமா?” எனக் கேட்டிருந்தார்.
இதற்கு மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதிலில், ”இந்தியக் குடியுரிமை என்பது இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள் 2009 இன் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.
அந்தச் சட்டத்தின் பிரிவு 5-ன் படி பதிவு செய்துகொண்ட அயல்நாட்டவர் எவரும் இந்தியக் குடியுரிமை பெற முடியும். அந்தச் சட்டத்தின் பிரிவு 6-ன்படி இயல்புரிமை அடிப்படையில் குடியுரிமையைப் பெற முடியும். சட்டவிரோதமாகக் குடிபெயர்ந்தவர்கள் இந்த இரு விதத்திலும் இந்தியக் குடியுரிமையைப் பெற முடியாது” என்று தெரிவித்தார்.
இதில், ஈழத் தமிழ் அகதிகள் அனைவரும் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவர்கள் எனும் கருத்தை அமைச்சர் மறைமுகமாக சுட்டிக் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.