சென்னை 17-வது சர்வதேச திரைப்பட விழா கலைவாணர் அரங்கில் நேற்று துவங்கியது. டிசம்பர் 12ம் தேதி தொடங்கி டிசம்பர் 19ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில், 55 நாடுகளை சேர்ந்த, 130 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த விழாவுக்காக, தமிழக அரசு சார்பில் 75 லட்சம் ரூபாய் நிதியுதவி தரப்பட்டுள்ளது.
இந்த விழாவில் முதல் படங்களாக, கொரிய படமான ‘தி பாரசைட்’ மற்றும் ஜெர்மன் படமான ‘கண்டர்மான்’ படமும் திரையிடப்படுகின்றன.
இந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பாக்யராஜ் பேசியதாவது, அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன். திரைப்படத்துறைக்கு அதிமுக தலைமைலான தமிழக அரசு அதிக நிதியுதவிகளை வழங்கி வருகின்றது. ‘ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது’ என சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் நான் பேசி சம்மன் வாங்கியதால் இப்போது பழமொழி சொல்லவே எனக்கு பயமாக இருக்கிறது என கூறினார்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக தனது 90-வது வயதிலும் தொடர்ச்சியாகப் திரைப்படங்களில் நடித்து வரும் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.