படிக்கட்டில் தடுமாறி விழுந்த பிரதமர் மோடியை தூக்கிவிட்ட பாதுகாவலர்கள்!

கான்பூரில் நமாமி கங்கா திட்டத்தை பார்வையிடுவதற்காக சென்ற பிரதமர் மோடி, படிக்கட்டில் ஏறி செல்லும் போது தடுமாறி கீழே சரிந்த போது பாதுகாவலர் தூக்கிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள சந்திரசேகர் ஆசாத் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணிகளுக்காக உருவாக்கப்பட்ட தேசிய கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.

இந்தக் கூட்டத்தில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், பீகார் துணை முதலமைச்சர் சுஷில் மோடி மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, நமாமி கங்கா திட்டத்தின் முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கங்கை நதியில் படகு பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தனர். பின்னர், மீண்டும் கரைக்கு திரும்பிய பிறகு, பிரதமர் மோடி படிக்கட்டின் மூலம் ஏறிச் செல்ல முற்பட்டார். அப்போது, திடீரென யாரும் எதிர்பார்க்காத நிலையில், பிரதமர் மோடி படிக்கட்டில் இருந்து திடீரென சரிந்து விழுந்தார்.

இதைக் கண்ட அருகில் இருந்த பாதுகாவலர்கள் பிரதமரை தூக்கி விட்டனர். இதனால், சற்று பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் வைரலாகி வருகிறது.