இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு நல்ல விடயமாக இருக்கலாம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் 70வது ஆண்டு நிறைவு விழா இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர், இந்திய வெளி விவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்த போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கூறிய செய்தி என்னவெனில்,
“இங்கு எதிர்பார்க்கின்றதை இந்தியப் பிரதமர் எதிர்பார்க்கின்றார். நீங்கள் சமத்துவத்தின் அடிப்படையில் நீதியின் அடிப்படையில் கௌரவத்தின் அடிப்படையில் சமாதானத்தின் அடிப்படையில் ஓர் அரசியல் தீர்வை நீங்கள் ஏற்படுத்த வேண்டுமென்று. இது சாதாரணமான சொற்கள் அல்ல.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒரு வாரத்திற்குள் இந்தியாவிற்குச் சென்ற போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான பேச்சுவார்த்தையின் ஒரு கூட்டு ஊடக சந்திப்பை நடத்தியிருந்தனர்.
இதன் போது பிரதமர் நரேந்திர மோடி இவ்விதமான ஒரு தீர்வை ஏற்படுத்தி தமிழ் மக்கள் இலங்கையில் கௌரவமாக வாழக் கூடிய சூழ்நிலை ஏற்பட வேண்டுமென்று நாங்கள் இலங்கை அரசாங்கத்திடம் கூறியிருக்கின்றோம்.
அதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று கூறியிருக்கின்றார். ஆகையினால் இந்த விடயம் நடைபெற வேண்டும். இவற்றை நிறைவேற்றுவதுதான் எங்களது கடமை. இவற்றை எவராலும் நிறைவேற்ற முடியாது என்றில்லை.
கற்பனையில் வாழ்கின்றவர்களால் நிறைவேற்ற முடியாது. இலங்கையில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு நல்ல விடயமாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சனைகள் அத்துடன் முடிவடையவில்லை.
தமிழ் மக்கள் இலங்கைத் தீவில் இரண்டாம் தரப் பிரஜைகளாகக் கணிக்கப்படுகின்றார்கள். அதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்களுக்கு சமத்துவ அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வு கொடுக்கப்பட வேண்டியது அத்தியாவசியம்.
இதனிடையே, தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான சர்வதேச சமூகம் விசேடமாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு உதவி புரிந்தார்கள்.
அதுவொரு நிபந்தனையின் அடிப்படையில் தான்.தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பிறகு நாங்கள் ஒரு நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வை காண்போம் என்று. ஆனால் தற்பொழுது அந்த வாக்குறுதிகளிலிருந்து தப்பிக்க முயல்கின்றார்கள்.
அதற்கு சர்வதேச சமூகம் இடமளிக்கக் கூடாது. அதற்கு சர்வதேச சமூகம் இடமளித்தால் அதனுடைய அர்த்தம் என்னவென்றால் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு அவர்களும் உதவுகின்றார்கள் என்றாகிவிடும்.” என கூறியுள்ளார்.