கோட்டாபய அரசு 69 இலட்சம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமே தவிர பழைய போக்குவரத்து வழக்குகளை தூசி தட்டி எடுப்பதை அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை வெலிக்கடை சிறைக்குச் சென்று சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
“பழிவாங்கும்போது நல்ல சுகமாக இருக்கும். உடலில் ஏற்பட்ட சொறியை சொறியும்போது சுகமாக இருக்கும். ஆனால், பின்னர் எரியும். 69 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதே அரசின் பொறுப்பு. அதனை விடுத்து போக்குவரத்து வழக்கு போன்ற பழைய குப்பைகளை தோண்டுவதில் பயனில்லை.
நாட்டில் வாகன விபத்துக்களில் ஆட்கள் இறந்துள்ளனர். இறக்காமல் இருந்ததில்லை. இறந்துள்ளனர். அந்தச் சம்பவங்கள் போக்குவரத்து வழக்கு நடவடிக்கைகளாகவே கையாளப்படும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.