சிறப்புமிக்க பெயர்ப் பலகையில் இடம்பிடித்த இலங்கை அணி வீரரின் பெயர்! எதற்காக தெரியுமா?

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய இலங்கை வீரர் ஓசத பெர்னாண்டோ கராச்சி தேசிய மைதானத்தில் சதம் அடித்தவர்களின் பெயர்ப் பலகையில் தனது பெயரினையும் பதித்துள்ளார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 19 ஆம் திகதி கராச்சியில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

இதில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியருந்தபோதிலும், தனது இரண்டாவது இன்னிங்ஸில் பொறுப்பான ஆட்டத்தினால் 3 விக்கெட்டுக்களை இழந்து 555 ஓட்டங்களை குவித்தது.

இதில் பாகிஸ்தான் அணி சார்பில் முதலாவதாக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த 4 வீரர்களும் சதமடித்தார்கள்

இதனால் 476 என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி நேற்றைய நான்காம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களை எடுத்துள்ளது.


இலங்கை அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆரம்ப வீரராக களமிறங்கிய ஓசத பெர்னாண்டோ மொத்தமாக 175 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 102 ஓட்டங்களை எடுத்தார்.

இந்த சதம் அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் பெற்ற முதல் சதம் ஆகும்.

அத்துடன் ஓசத பெர்னாண்டோ கராச்சி மைதானத்தில் சதத்தை பூர்த்தி செய்தவர்களின் பெயர்ப் பட்டியில் அடங்கிய பெயர்ப் பலகையிலும் தனது பெயரை பொறித்துள்ளார்.

இது குறித்த புகைப்படத்தை இலங்கை கிரிக்கெட் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.