அரசியலில் ஓர் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் கோவையை சேர்ந்த இளைஞன். ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோவை கல்லூரி மாணவர் சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நீலாம்பூர் கிராம ஊராட்சி மன்ற 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட உள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்ச வயது 21 ஆக இருக்க வேண்டும். அதன்படி கோவையை சேர்ந்த மாணவர் ஒருவர் 21 வயதில் வருகிற ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ளார்.
கோவை நீலாம்பூர் கிழக்கு வீதியை சேர்ந்தவர் எஸ்.நாகார்ஜூன். இவர் 17.6.1998-ம் ஆண்டு பிறந்தவர். கோவையில் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். அதைத் தொடர்ந்து கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.ஏ. இதழியியல் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
நாகார்ஜூனின் தந்தை செந்தில்குமார் மில் ஊழியர். தாயார் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். நாகார்ஜூனுக்கு ஒரு தங்கை உள்ளார்.
இவர் சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நீலாம்பூர் கிராம ஊராட்சி மன்ற 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடுகிறார். அந்த வார்டில் இவர் மட்டுமின்றி மேலும் 2 பேர் போட்டியிடுகின்றனர்.
21 வயது 6 மாதங்கள் நிறைந்த மாணவர் நாகார்ஜூன் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது ஏன் என வினவிய போது இவ்வாறு பதில் அளித்தார்:
”இளைஞர்கள் படித்தோம். வேலைக்கு சென்றோம் என்றில்லாமல் நம்மை சுற்றியுள்ள மக்களுக்கும் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட வேண்டும். நான் கடந்த ஒரு ஆண்டாக உடனடி தேவை உள்ளாட்சி தேர்தல் என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரை தயாரித்து வருகிறேன். இதனால் உள்ளாட்சி அமைப்புகளின் அவசியம் குறித்து அறிந்து கொண்டேன். அதன் மூலம் மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்ற எண்ணத்தில் தான் தேர்தலில் போட்டியிடுகிறேன்.
நான் வெற்றி பெற்றால் என் வார்டில் அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு கொண்டு வர முயற்சி மேற்கொள்வேன். அனைத்து தெருக்களிலும் சுகாதாரத்தை மேம்படுத்த முயற்சி செய்வேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.