இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 263 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றியீட்டியது.
கராச்சியில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 191 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை 271 ரன்கள் சேர்த்தது.
80 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் இலங்கை இந்த டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2வது இன்னிங்சில் பாகிஸ்தானின் முதல் நான்கு ஆட்டக்காரர்களும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
தொடக்க வீரர்களான ஷான் மசூத் – அபித் அலி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 278 ரன்கள் குவித்தது. ஷான் மசூத் 135 ரன்களும், அபித் அலி 174 ரன்களும் விளாசினர். அடுத்து வந்த கப்டன் அசார் அலி 118 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் நட்சத்திர வீரரான பாபர் அசாம் 131 பந்தில் 100 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் 3 விக்கெட் இழப்பிற்கு 553 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
475 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் இலங்கை அணிக்கு 476 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. கடின இலக்குடன் இலங்கை அணி 2வது இன்னிங்சில் துடுப்பாட்டம் செய்தது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களான முகமது அப்பாஸ், நசீம் ஷா, ஷாஹீன் அப்ரிடி ஆகியோரின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது.
தொடக்க வீரர் ஒஷாத பெர்னாண்டோ மட்டும் தாக்குப்பிடித்து விளையாடினார். ஒரு கட்டத்தில் இலங்கை 97 ரன்னுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. 6வது விக்கெட்டுக்கு பெர்னாண்டோ உடன் விக்கெட் கீப்பர் டிக்வெல்ல ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. பெர்னாண்டோ சதமும், டிக்வெல்லா அரைசதமும் அடித்தனர்.
இதனால் நான்காவது நாள் ஆட்டம் முடிவதற்கு சற்று முன்னாக டிக்வெல்லா 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 6வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி104 ரன்கள் சேர்த்தது.
அடுத்து வந்த தில்ருவான் பெரேரா 5 ரன்னில் ஆட்டமிழக்க நேற்றைய 4வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இலங்கை 7 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் சேர்த்துள்ளது. ஒஷாத பெர்னாண்டோ 102 ரன்களுடனும் களத்தில் இருந்தார்.
நேற்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. ஒஷாடா பெர்னாண்டோ நேற்று எடுத்திருந்த 102 ரன்னிலேயே ஆட்டம் இழந்தார். மேலும் இரண்டு விக்கெட்டுக்கள் ரன்ஏதும் எடுக்க முடியாமல் விழ இலங்கை 212 ரன்னில் ஓல்அவுட் ஆனது.
இதனால் பாகிஸ்தான் 263 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் இளம் வேகப்பந்து வீச்சாளரான நசீம் ஷா ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
முதல் போட்டி மழையினால் சமனிலை ஆனதால் பாகிஸ்தான் தொடரை 1-0 எனக்கைப்பற்றியது. 10 வருடத்திற்குப் பிறகு சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரை பாகிஸ்தான் வென்றது குறிப்பிடத்தக்கது.