தனுசு ராசியில் ஆறு கிரகங்கள்… கூடவே சூரிய கிரகணம்..!!

தற்போது தனுசு ராசியில் ஆறு கிரகங்கள் அதாவது சூரியன், சந்திரன், சனி, குரு, கேது, புதன் ஒன்றாக அமைந்துள்ளது. சூரிய கிரகணம் இந்த ஆறு கிரகங்கள் ஒன்றாக தனுசு ராசியில் இருக்கும்போது நிகழ உள்ளது.

சூரிய கிரகணம் :

பூமிக்கும், சூரியனுக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் நிலவு வரும்போது அதன் நிழல் பூமியின் மீது விழும் நிகழ்வு சூரிய கிரகணமாகும். சூரியன் முழுவதும் நிலவால் மறைக்கப்படுவது முழு சூரிய கிரகணம்.

சூரிய கிரகணம் டிசம்பர் மாதம் 26ஆம் தேதி நாளை மறுநாள் சென்னை நேரப்படி காலை 08.08 மணி முதல் காலை 11.19 மணி வரை நடைபெறுகிறது.

சூரிய கிரகணம் 5 நிலைகளைக் கொண்டுள்ளது.

முதல் நிலை : சூரியனை நிலவு தீண்டும் நிலை ஸ்பரிசம் என அழைக்கப்படுகிறது.

இரண்டாம் நிலை : சூரியனுக்குள் முழுமையாக நிலவு சென்றுவிடுவது.

மூன்றாம் நிலை : நிலவினால் சூரியன் மறைக்கப்பட்டு விளிம்பு பிரகாசிப்பது.

நான்காவது நிலை : சூரியனிலிருந்து நிலவு விலக தொடங்குவது.

ஐந்தாம் நிலை : கிரகணம் முழுமையாக விலகுவது. இது மோட்சம் என அழைக்கப்படுகிறது.

இந்த அதிசய நிகழ்வு இந்தியாவில் தமிழ்நாட்டிலும், கர்நாடக மாநிலத்தின் தென்பகுதியிலும், கேரளாவின் வடபகுதியிலும் பார்க்க முடியும். மற்ற பகுதிகளை விட தமிழகத்தில்தான், அதிக அளவில் இந்த அபூர்வ சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.

நிகழும் வானியல் அதிசயத்தை சூரிய கண்ணாடிகள், சூரிய ஒளி பிம்பங்களின் மூலம் எளிதில் கண்டு ரசிக்கலாம்.

ஆறு கிரகங்களின் சேர்க்கை ஆபத்தை தருமா?

இந்த ஆறு கிரகங்களின் சேர்க்கையின்போது ஏற்படும் சூரிய கிரகணத்தினால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமா? என்று எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்.

காலபுருஷ தத்துவப்படி 9ம் வீட்டில் அதாவது தனுசில் குரு ஆட்சி புரிந்து இருப்பது மிகச்சிறந்த ஒன்று. டிசம்பர் 25, 26, 27 தேதிகளில் தனுசில் சூரியன், சந்திரன், குரு, சனி, கேது, புதன் சேர்க்கை என்பது இரண்டரை நாட்களில் இந்த நிகழ்வு நடைபெறப்போகிறது. இந்த அமைப்பால் ஒரு சில யோகங்கள் மற்றும் தோஷங்கள் நடைபெறும்.

திரிகோணத்தில் இருக்கும் கிரகம் சுப பலன்களை அளிக்கும் தன்மை உடையதாகும். மேலும் திரிகோணத்தில் அசுப கிரகங்கள் இருந்தாலும் அவை நற்பலன் மட்டுமே செய்ய கூடியவையாகும். கால புருஷனுக்கு 9ஆம் வீடான தனுசில் சூரியன், சந்திரன், குரு, சனி, கேது, புதன் திரிகோணத்தில் நிற்பதினால் அசுப பலன்களை குறைத்து சுப பலன்களை செய்யும் தன்மையை அருளுகின்றனர்.

சமூக முன்னேற்றத்திற்கான செயல்பாடுகள் மேம்படும்.

சுய முயற்சி மற்றும் உழைப்பை கொண்டவர்களுக்கு ஆதரவான சூழல் ஏற்படும்.

எழுத்து துறைகளில் எதிர்காலம் சார்ந்து சில மாற்றங்கள் ஏற்படலாம்.

ஆன்மிகம் சார்ந்த துறைகளில் இருந்துவந்த மறைப்புகள் வெளிப்படும்.

மக்களின் தேவைகள் சில போராட்டங்களுக்கு பின்பு ஈடேறும்.

புதிய தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் எதிர்பாராத வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் உண்டாகும்