மீண்டும் இந்திய அணிக்காக சானியா மிர்சா!

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியின் சார்பில் விளையாட இடம் பிடித்துள்ளார்.

கடைசியாக அவர் 2016ம் ஆண்டு பெடரேஷன் கோப்பை தொடரில் களமிறங்கிய நிலையில், பின்னர் கர்ப்பம் ஆனதாலும், குழந்தை பிறந்த பிறகும் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வந்தார்.

தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து முழு உடல்தகுதியுடன் டென்னிஸ் ஆட தயாராகி உள்ள அவர் ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் உக்ரைன் வீராங்கனை நடியா கிச்சனோக்குடன் இணைந்து விளையாட உள்ளார்.

இதற்கிடையே பெடரேஷன் கோப்பைக்கான இந்திய மகளிர் அணியில் அவர் இடம் பிடித்துள்ளார். அவருடன் அங்கிதா ரெய்னா, டியா பாட்டியா, ருதுஜா போசலே, கர்மான் கவுர் தண்டி ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். விஷால் உப்பல் கேப்டனாகவும், அங்கிதா பாம்ப்ரி பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.