15 பேரை கொண்ட அமைச்சரவையை நியமிப்பதாக கூறிய அரசாங்கம் சுமார் 50 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சிறப்புரிமைகளும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் கிடைக்கும். இராஜாங்க அமைச்சர் என்ற பெயரில் மாத்திரமே வித்தியாசம் இருக்கின்றது. அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், வாகனம், சிறப்புரிமைகளில் எந்த வித்தியாசமும் இல்லை.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவான பின்னர் அவர் நாட்டின் ஜனாதிபதி அதற்கு அப்பால் மேல செல்லவும் முடியாது, கீழே வரவும் முடியாது.
தன்னை ஜனாதிபதியாக பதவிக்கு கொண்டு வர மேடைகளில் கத்தியவர்கள் அவர்களின் வழக்குகளில் இருந்து தப்பிக்கவே கத்தினர் என்பதை ஜனாதிபதி புரிந்துக்கொள்ள வேண்டும். அவர்கள் தன்மை தற்காத்து கொள்ளவே அதனை செய்தனர், நாட்டை நினைத்து செய்யவில்லை.
உண்மையில் எதனையும் எதிர்பார்க்காது, நாட்டின் பாதுகாப்பு கருதி 69 லட்சம் பேரே ஜனாதிபதிக்கு வாக்களித்தனர்.
இந்த மக்களுக்கு ஜனாதிபதியிடம் சென்று அமைச்சு பதவிகளையோ, வாகனங்களையோ கேட்க முடியாது. தேசியத்திற்கும், பௌத்த சமயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடே அந்த மக்களுக்கு தேவை.
பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், அந்த மக்கள் பட்டினியில் கஷ்டப்படும் போது, நத்தார் போன்ற பண்டிகைக் காலங்களில் அந்த மக்களுக்கு கையை விரித்து பணத்தை செலவிட முடியாத போது, ஜனாதிபதி சிலரை மகிழ்விக்க அவர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்கினார்.
அதேவேளை வெள்ளை வான் சம்பவம் தொடர்பான சகல விடயங்களும் எதிர்காலத்தில் தெரியவரும். அந்த காலத்தில் அவர்களுடன் இணைந்து நாங்கள் அதனை செய்தோம், இதனை செய்தோம் என்று எங்களிடம் கூறுவோரும் இருக்கின்றனர்.
இது நீதிமன்றத்தில் இருக்கும் விடயம். உண்மையை கூறியது யார். பொய் கூறியது யார் என்பது நீதிமன்றத்தில் தெரியவரும்.
அதனை நானோ, நீங்களோ தீர்மானிக்க முடியாது. உண்மை வெளியாகும் வரை பொருத்திருங்கள். இவர்கள் மேடைகளில் ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க பற்றி பேசினார்களா?. அவர்கள் பதியூதீன், ரவூப் ஹக்கீம், சாபி, மங்கள சமரவீர, ஆகியோர் பற்றியே பேசினர்.
பதியூதீன் காட்டை அழித்தார் என்றால் கைது செய்யுங்களேன். ஏன் வெளியில் வைத்துள்ளனர். அவரை கைது செய்தால், யார் கட்டை அழித்தது, யார் மக்களை அங்கு குடியேற்றியது என்பது உறுதியாகும்.
காட்டை அழிக்க யார் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது என்று எல்லாம் உறுதியாகும் என ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.