நமது பிஸியான வாழ்க்கையில் யாருடனும் அமர்ந்து மனம்விட்டு பேச கூட நேரம் இல்லாமல் போய்விடுகிறது. பிஸியான ஆபிஸ் வேலை, குழந்தைகளை கவனிப்பது, வீட்டு வேலைகளை செய்வது என அதிக வேலைச்சுமை உங்களது மன இறுக்கத்தை அதிகரிக்கும்.
அதுமட்டுமில்லாமல், உறவுகளுக்குள் புரிதல் இல்லாமல் இருப்பது, உறவுகளுக்குள்ளான சண்டை, அலுவலகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஆகியவை உங்களது மன சுமையை அதிகரிக்கும்.
நீண்ட நாட்கள் இந்த மன அழுத்தம் தேக்கிவைக்கப்படுவதால், மன நோய் தான் உண்டாகும். இந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட உங்களுக்கு ஒரு எளிமையான வழி உள்ளது, அது பற்றி இந்த பகுதியில் காணலாம்.
பகிர்ந்து கொள்ளுதல்
நமது மனதில் இருக்கும் மகிழ்ச்சியை மற்றவரிடம் பகிர்ந்து கொண்டால், அது இரண்டு மடங்காகும். கவலையை மற்றவரிடம் பகிர்ந்து கொண்டால் அது பாதியாக குறையும்.
எனவே உங்களது கவலைகளை மற்றவர்களிடம் மனம் திறந்து சொல்லுங்கள். அவ்வாறு உங்களது கவலைகளை பகிர்ந்து கொள்ள நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒருவர் உங்களுக்கு உண்மையானவராக இருக்க வேண்டியது அவசியம்.
அழுகை
நமக்கு மிகுந்த கவலையை கொடுக்கும் ஒரு விஷயத்தை நினைத்து நாம் மனம் திறந்து அழுவது மிகவும் சிறந்த ஒரு விஷயம் ஆகும். உங்களது மனதில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் நினைத்து கண்ணீர் சிந்தினால், கண்ணிரோடு சேர்ந்து பிரச்சனையும் கரைந்து போய்விடும்.
பெண்களை விட ஆண்கள் அதிக மன இறுக்கத்திற்கு ஆழாகின்றனர். அதற்கு காரணம், ஆண்கள் யாரும் எளிதில் அழுவதில்லை என்பதே ஆகும்.
தன்னுடன் பேசிக்கொள்ளுதல்
உங்களது மனதில் இருக்கும் கேள்விகள், தவிப்புகள், கோபங்கள் என மற்றவர்களுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ள நினைக்கும் ஒரு விஷயத்தை நீங்கள் உங்களுடனே பேசிக்கொள்ளுங்கள். உங்களுக்கான பதிலை உங்களிடம் இருந்தே பெற்றுக்கொள்ளுங்கள்.
உங்களது மகிழ்ச்சியை கூட உங்களுடனே பகிர்ந்து கொள்ளுங்கள், ஒவ்வொரு விஷயத்தை பற்றியும், நீங்கள் உங்களுக்குள்ளேயே பகிர்ந்து கொள்வதால், சிறந்த பலன் கிடைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன
உணர்ச்சிகளை புரிந்து கொள்ளுதல்
ஆராய்ச்சியில் ஒரு மூன்றாம் நபர் உங்களது உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் வேகத்தை விட உங்களால் உங்களது சொந்த உணர்சியை எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எழுதுதல்
நாவின் மூலம் வார்த்தைகளால் வலி வெளிப்படுவது குறைவு தான். ஆனால் எழுத்துக்கள் மூலம் அந்த வலி அதிகமாக வெளிப்பட கூடும். எனவே ஒரு காகிதத்தில் உங்களது மன சஞ்சலங்களை எழுதி, அதை கிழித்து போட்டுவிடுங்கள். அதோடு உங்களது மன அழுத்தமும் முடிவுக்கு வந்துவிடும்.