மீ டூ இயக்கத்தை பற்றி உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்ட சமயத்தில் தமிழகத்தில் மீ டூ சர்ச்சையை கொண்டு வந்தவர் பாடகி சின்மயி. இவர் மீ டூ இயக்கத்தின் மூலம் பல பேர் குறித்து வெளிப்படையாக கூறினார். அதேபோல் பல பெண்களை வெளிப்படையாக பேசவும் இவர் ஊக்குவித்தார்.
இந்நிலையில் சின்மயியின் தாயார் தனியார் விவாத நிகழ்ச்சி ஒன்றில் “தேவதாசி முறையென்பது இந்த பூமிக்கு, மண்ணுக்கு, பாரத தேசத்திற்கு சொந்தமானது. அது எப்பேர்ப்பட்ட ஒசத்தியான சிஸ்டம். அதை கொச்சை படுத்தியதால் நான் பெரியாரை வெறுக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளதை பலரும் எதிர்த்து வருகின்றனர்.
இதை பற்றி கூறும்படி சின்மயிடம் ட்விட்டரில் கேள்வியெழுப்பி உள்ளனர் சிலர்.
இதனை குறித்து பாடகி சின்மயி கூறியதாவது: நான் இந்த தேவதாசி முறையை முற்றிலும் எதிர்க்கிறேன். என்னுடைய அம்மாவுடைய கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. என்னை தேவதாசி ஆக சொல்வது நியாயமும் இல்லை. அவங்க செயலுக்கு அவங்க தான் பொறுப்பு, ஆனாலும் மனம் புண்பட்டவர்களுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.