‘தர்பார்’ படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

2020-ம் ஆண்டு பொங்கல் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டாலும், எந்தத் திகதியில் வெளியீடு என்பதைப் படக்குழு அறிவிக்காமலேயே பணிகளைக் கவனித்து வந்தது.

இந்நிலையில் தற்போது ‘தர்பார்’ திரைப்படம் ஜனவரி 9- ஆம் திகதி இந்தியா முழுவதும் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

‘தர்பார்’ படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, ப்ரதீக் பார்பர், யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.