ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடன உரை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கும் இடையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று(வெள்ளிக்கிழமை) சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
இந்த சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ஜனாதிபதியின் கொள்கைப்பிரகடன உரையில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஒற்றையாட்சிக்கான நிகழ்ச்சி நிரல், பௌத்த மதத்தை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் அவரது பேச்சில் இருந்தன. ஆனால் ஏனைய மதங்கள் தொடர்பாகவோ அவற்றுக்கு இருக்கும் பிரச்சினை தொடர்பாகவோ எந்த விடயமும் பேச்சில் இருக்கவில்லை.
இனங்களுக்கான பிரச்சினைகளை தள்ளிவைத்து நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் இணைந்து செயற்படவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்ந்தும் நீர்பூத்த நெருப்பாகவே இருந்துவருகின்றது. அதனால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக எதுவும் ஜனாதிபதியின் உரையில் இல்லாமல் இருந்தமை கவலைக்குரிய விடயமாகும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.