பொதுத்தேர்தலுக்கு பின்னர் ஐ.தே.க.தலைவர் பதவியில் மாற்றம் ஏற்படும்- பிரசன்ன

நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் படுதோல்வியை தழுவியப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய தலைவர் ஒருவரை நியமிக்க நேரிடுமென  அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எட்டாவது  நாடாளுமன்றத்தின்  4ஆவது கூட்டத் தொடரில் நேற்று (வெள்ளிக்கிழமை) அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பங்கேற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாடாளுமன்றத்தில் எமக்கு பெரும்பான்மை கிடையாது. த.தே.கூ, முஸ்லிம் கட்சிகள் எமக்கு எதிராகவே உள்ளன.

மேலும் எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதிக்கு பின்னர்  நாடாளுமன்றத்தை கலைக்க வாய்ப்புள்ளது.  எனவே அடுத்த தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று ஜனாதிபதியின் கொள்கைகளை செயற்படுத்துவோம். அதற்கான செயற்றிட்டங்களை தற்போதே முன்னெடுக்க ஆரம்பித்துள்ளோம்.

அரசாங்கத்தின் நல்ல முன்னெடுப்புகளுக்கு ஒத்துழைப்பதாக ஐ.தே.க கூறினாலும் பின்னர் அதனை சிதைக்கும் செயற்பாடுகளையே மேற்கொள்ளும்.

இதேவேளை சண்டையிட்டு ஜனாதிபதி வேட்பாளரானான  சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் பெற்றுள்ளார்.  எனவே  நாடாளுமன்ற  தேர்தலில் படுதோல்வியடைந்த பின்னர் ஐ.தே.கவிற்கு புதிய தலைவர் ஒருவரை தேட வேண்டிய நிலைமை ஏற்படும்” என குறிப்பிட்டுள்ளார்.